ஆப்கனில் 2வது நாளாக நிலநடுக்கம்! பீதியில் மக்கள்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் நிலப்பரப்பிலிருந்து சுமார் 15 அடி ஆழத்தில் நேற்று (மே.3) மதியம் 1.20 மணியளவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது நிலப்பரப்புக்கு மிக அருகாமையில் ஏற்பட்டுள்ளதினால் பின் அதிர்வுகள் ஏதேனும் ஏற்படக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னதாக, நேற்று முன்தினம் (மே.2) தலைநகர் காபுல்-க்கு மிக அருகாமையில் நிலப்பரப்பிலிருந்து சுமார் 150 அடி ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, 2வது நாளாக அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கடுமையானத் தாக்குதல்கள், இடமாற்றம், வறுமை ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கன் மக்களைக் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.