;
Athirady Tamil News

யாழில் எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி புகையிலை விற்றவருக்கு கடும் தண்டம்

0

யாழில் சுகாதார எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் உள்ளிட்ட புகையிலைசார் பொருட்களை விற்றவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ், தெல்லிப்பளையில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரிற்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெல்லிப்பளை பொதுச் சுகாதாரப்பரிசோதகர் கடம்பரூபன் நேற்று (05) வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தாக்கல் செய்த வழக்கின் அடிப்படையில், தண்டம் விதிக்கப்பட்டதுடன் இனி இவ்வாறான குற்றசெயலை செய்ய வேண்டாம் என எச்சரிக்கையையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தால் விடுக்கப்பட்டுள்ளது.

புகைத்தல் எதிர்ப்பு வாரம் கடைபிடிக்கப்படும் இவ்வாரத்தில் புகையிலைசார் பொருள்கள் தொடர்பான தொடர் சோதனைகளில் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் பரா நந்தகுமார் தலைமையில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது தொடர் எச்சரிக்கைகளை மீறி 21 வயதுக்குட்பட்டோருக்கு புகையிலை விற்பனை செய்வோர் மற்றும் 80% சுகாதார எச்சரிக்கை இன்றி தனித்தனியாக சிகரெட் பீடி சுருட்டு புகையிலை துண்டு விற்பனை செய்யும் சில வர்த்தக நிறுவனங்களிற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு வர்த்தக நிலையத்திற்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு சிலவற்றுக்கு விசாரணைக்கு திகதி இடப்பட்டுள்ளது.

அதே நேரம் பல வர்த்தக நிறுவனங்கள் சமூகத்தின் நன்மை கருதி புற்றுநோயின் கொடுமைகளை யாரும் அனுபவிக்கக்கூடாது எனும் சிந்தையோடும் பாடசாலை மாணவர் உள்ளிட்ட இளையோர் புகையிலைசார் பொருட்களுக்கு

அடிமையாகி கல்வியையும் இளமைக்கால வாழ்வையும் தொலைக்கும் அவலத்திற்கு முற்றுபுள்ளி வைக்கும் விருப்போடும் புகையிலைசார் பொருட்களின் விற்பனையை தெல்லிப்பளையில் முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.