உண்மையான அன்னபெல்லா பொம்மைக்கு என்ன ஆனது? மக்கள் கலக்கம்!

அருங்காட்சியகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த உண்மையான அன்னபெல்லா பொம்மை காணாமல் போனதாக இணையதளத்தில் வெளியான செய்திகளால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
லூசியானாவில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க நோட்டோவே உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட நிலையில், சிலர், அருங்காட்சியகத்தில் அன்னபெல்லா பொம்மை இருந்த இடத்தில் அதனைக் காணவில்லை என பார்வையாளர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, மக்களை கதிகலங்க வைத்துவிட்டனர்.
தனது உரிமையாளருக்கு மிகக் கோரமான மரணத்தைக் கொடுத்ததாகக் கருதப்படும் அன்னபெல்லா பொம்மையை அடிப்படையாக வைத்து பல பேய்ப் படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மிகவும் புகழ்(?)பெற்ற அன்னபெல்லா பொம்மை – இதில் பேய் இருக்கிறது என பலரும் நம்புகிறார்கள் – கடந்த வாரம் அமெரிக்கா முழுவதும் நகர்வலமாகக் கொண்டு சென்றபோது காணாமல் போனதாக இணையதளத்தில் யாரோ பொய்ச் செய்தி பரப்ப அது காட்டுத் தீ போல பரவி, பல பரபரப்புத் தகவல்களுக்கும் விடியோக்களுக்கும் வழிவகுத்துவிட்டது.
அண்மையில், நியூ ஓர்லியன்ஸில் நடந்த பல்வேறு அசம்பாவிதங்கள் மற்றும் தீ விபத்துகளின் பின்னணியில் இந்த அன்னபெல்லா பொம்மைதான் இருப்பதாகவும் அது எப்போதும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இல்லை எனவும் தாறுமாறாக தகவல்கள் பரவின.
இது இப்படியாகச் சென்றுகொண்டிருக்க, லூசியானா உணவகத்தில் தீப்பிடித்தது. அப்போது, அன்னபெல்லா பொம்மை, அங்குதான் நகர்வலம் சென்று கொண்டிருந்தது என்றும், அதனால்தான் தீ பற்றியதாகவும் பலரும் கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டனர். ஆனால், அதெல்லாம் ஒன்றுமில்லை என்று தீயணைப்புத் துறையினர் கூறிவிட்டனர்.
கன்னெக்ட்டில் உள்ள ஆக்குல்ட் அருங்காட்சியகத்தில் உண்மையான அன்னபெல் பொம்மை வைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், அமானுஷ்யங்கள் குறித்து ஆய்வு செய்யும் இரண்டு பேர் அந்த பொம்மையை அமெரிக்காவில் நகர்வலமாகக் கொண்டு வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகின.
போலி விடியோக்கள்
இதைத் தொடர்ந்து, அன்னபெல்லா பொம்மையை வைத்துக் கொண்டு பலரும் பல விடியோக்களை உருவாக்கி மக்களை துரத்துவதாகவும், அது சுவரில் குதித்து சண்டை போடுவது போலவும் போன்ற போலி விடியோக்கள் வைரலாகின. இதனை எல்லாம் பார்த்த மக்களோ, அன்னபெல்லா பொம்மையை விட இவர்கள் மோசமாக இருக்கிறார்களே என்று சொல்லி அதிருப்தி வெளியிட்டனர்.
உண்மையிலேயே அன்னபெல்லா நகர்வலம் கொண்டு செல்லப்பட்டதா? அருங்காட்சியகத்திலிருந்து காணாமல் போனதா என்பதெல்லாம் உறுதி செய்யப்படாத நிலையில், அது பத்திரமாக இருக்கிறது என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டு மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.