;
Athirady Tamil News

யாழ்.செம்மணிப் புதைகுழி உண்மைகளை கண்டறிய அரசு ஒத்துழைக்க வேண்டும் ; சுமந்திரன் வலியுறுத்து

0

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகள் தொடரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அரசாங்கம் உண்மைகளை கண்டறிவதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

செம்மணியில் மனிதப்புதைகுழு தோண்டப்பட்டபோது அதற்கு அண்மையில் மனிதப்புதைகுழிகள் இருப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன என்று செய்திகள் வந்துள்ளன.

முன்னதாக, செம்மணிப்பகுதியில் கிருஷாந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இறுதி தருணத்தில் தெரிவித்த விடயங்களின் அடிப்படையில் தான் செம்மணியில் அகழ்வுகள் செய்யப்பட்டன.

ஆனாலும் அந்த அகழ்வுப்பணிகள் நிறைவடைற்கு முன்னதாகவே அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. அதற்குப்பின்னராக பல்வேறு இடங்களில் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் குறைந்தது 13 இடங்களில் மனிதப்புதைகுழிகள் இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மன்னாரில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழப்பட்டபோதும் அது முன்னெடுக்கப்படவில்லை.

பின்னர் கொக்குத்தொடுவாயில் மனிதப்புதைகுழு கண்டறியப்பட்டு அகழகப்பட்டபோதும் அப்பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன. அவ்வாறான நிலையில் செம்மணிப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இடைநிறுத்தப்படக்கூடாது.

விசேடமாக அங்கு இளம்பிள்ளைகள், பெண்கள் அடித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆகவே இதற்குப் பின்னால் என்ன நடைபெற்றுள்ளது, யார் இதற்கு காரணமானவர்கள், எந்தக்கால கட்டத்தில் நடைபெற்றது என்பதுள்ளிட்ட அனைத்து விடயங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ஆகவே செம்மணி புதைகுழியின் அகழ்வுச் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதோடு பணமில்லையென்றோ வேறு காரணங்களைக் கூறியோ அப்பணிகள் இடை நிறுத்தப்படக்கூடாது.

அரசாங்கம் அகழ்வுப்பணிகளுக்கான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும். செம்மணி புதைகுழி மட்டுமல்ல ஏனைய புதைகுழிகளின் அகழ்வுப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.

உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். அவ்வாறு உண்மைகளை வெளிப்படுத்தி தாங்கள் சொல்வதைச் செய்பவர்கள் என்பதை அரசாங்கம் செயலில் காட்ட வேண்டும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.