;
Athirady Tamil News

போர் தொடங்கிவிட்டது! டிரம்ப் அச்சுறுத்தலுக்கு கமேனி பதிலடி!!

0

இஸ்ரேல் – ஈரான் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வரும் நிலையில், நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், போர் தொடங்கிவிட்டது என்று ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கமேனி பதுங்கியிருக்கும் இடம் தங்களுக்குத் தெரிய வந்திருப்பதாகவும், நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்றும் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் ஈரானுக்கு எச்சரிக்கை விடுவது போல பதிவிட்டிருந்தார்.

அதாவது, டிரம்ப் தமது சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில், ஈரானின் உச்ச தலைவராக அறியப்படுபவரைக் கொல்ல இப்போதைக்கு திட்டம் தீட்டவில்லை. அவர் பதுங்கியிருக்குமிடம் எங்களுக்குத் தெரியும். அவர் எவ்வித நிபந்தனையுமின்றி சரணடைவதே சிறந்த தீர்வு. அமெரிக்காவின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று கூறியிருந்தார்.

இந்த பதிவுக்கு அடுத்த சில வினாடிகளில், கமேனி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், அடுத்தடுத்த பதிவுகள் மூலம் பதிலளித்துள்ளார். பயங்கரவாதி சியோனிஸ்ட் ஆட்சிக்கு நாங்கள் நிச்சயம் பதிலடி கொடுப்போம். சியோனிஸ்ட்டுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று பதிவிட்டிருந்தார்.

இஸ்ரேல் மீது, நேற்று காலை ஈரான் இரண்டு சுற்று ஏவுகணைத் தாக்குதலை நடத்திய சற்று நேரத்துக்கெல்லாம் இந்த பதிவு போடப்பட்டுள்ளது.

கமேனியின் மற்றொரு பதிவில், இஸ்ரேல் – ஈரான் சண்டையில், ஈரான் நடத்தும் பதில் தாக்குதலானது, ஒரு மிகப்பெரிய கருத்தியலுக்கான போராட்டம் போல சித்தரித்துள்ளார். பார்ஸி மொழியில் அவர் போர் தொடங்கிவிட்டது என்றும் பதிவிட்டுள்ளார். அதனுடன், ஒரு கோட்டைக்குள் வீரன் ஒருவன் கையில் வாளுடன் நுழைவது போன்ற புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க கைபர் போரைக் குறிப்பிடுவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

போர் ஏன்? என்ன காரணம்?

ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்காவுடன் பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.

இந்த நிலையில் ஈரானின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வார இறுதியில் தாக்குதல் நடத்தியது.

அதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்கியது.

அதைத் தொடா்ந்து ஈரானில் தனது வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீதான சரமாரி தாக்குதல்களை தொடா்ந்தது. தொடர்ந்து ஆறு நாள்களாக நீடிக்கும் இந்த மோதல் காரணமாக ஈரானில் 224 போ் உயிரிழந்தனா்; சுமாா் 1,800 போ் காயமடைந்தனா். ஈரான் நடத்திய தாக்குதலில் 24 இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா்; சுமாா் 600 போ் காயமடைந்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.