யாழ்ப்பாணம் மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கல்

விசேட (காணி) மத்தியஸ்த சபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி தலைமையில் நேற்றைய தினம் (18.06.2025) யாழ்.மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கருத்து தெரிவிக்கையில், |
இதுவரை மத்தியஸ்த சபைக்கு 1333 பிணக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்காக இவ் விசேட மத்தியஸ்த சபை நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், காணி தொடர்பான பிணக்குகளே அதிகமாக காணப்படுவதாகவும், காணி தொடர்பான ஆவணங்கள் சரியாக காணப்படுவதால் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவான பிணக்குகளே தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றம் செல்ல முன்னர் மத்தியஸ்த சபை செயற்பாட்டை மக்கள் நாடுவதால் நடுநிலைமை மாறாத தன்மையை பேண வேண்டும் எனவும், அவர்களுக்கான நியாயமானதும் நீதியானதுமான அவர்கள் நலன் சாா்ந்த விடயங்களை கவனத்தில் கொண்டு தீர்ப்பை வழங்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உரியது எனவும், பொருளாதார வலுவிழந்தவர்களையும் அவர்கள் தன்மையை விடுத்து விடயத்தை சரியான முறையில் அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், மத்தியஸ்த சபை பிரதேச நியமனங்களை வழங்கும் போது அந்தந்த பிரதேசங்களை சாராதவர்களை நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்துடன், மத்தியஸ்த சபை நியமனங்களை பெற்றுக்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உட்பட 32 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கினார்.
இந் நிகழ்வில் கடந்த மத்தியஸ்த சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், புதிதாக நியமனம் பெற்ற தவிசாளர் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், மத்தியஸ்த சபை மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக துறை சாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.