;
Athirady Tamil News

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருட்கள் வழங்கத்தடை

0

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் போதுமான எரிபொருள் கையிருப்பு இருக்கின்ற போதிலும் வாடிக்கையாளர்களின் தேவையற்ற பயத்தின் காரணமாக இச் செயற்பாடு தோன்றுவதனால் வாகனங்களின் தாங்கிகளை தவிர பிற கொள்கலன்கள் மற்றும் பீப்பாய்களில் எரிபொருள் விநியோகிப்பது உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மேலும் அதற்கு மாறாகச் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இத தவிர நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு எரிபொருள் மாபியாக்கள் தலையெடுக்கு முன்னர் QR முறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென சில தரப்பினர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை இருப்பதாக பரப்பப்படும் போலி செய்திகளுக்கு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் பெற்றோல் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எண்ணெய் இருப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

முன்னதாக இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய் இருப்புகளை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் பெற தேவையான நடவடிக்கைகள் தயாராக உள்ளதாகவும் இது தொடர்பாக பரப்பப்படும் போலிச் செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.