;
Athirady Tamil News

12 மணி நேரம்… ஈரானிய தளபதிகளுக்கு கெடு விதித்த இஸ்ரேலின் மொசாட்

0

ஈரானிய தளபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைக் கொன்றுவிடுவதாக இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் மிரட்டல் விடுத்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மொசாட் உளவாளிகள்
ஜூன் 13 அன்று ஈரான் மீது அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் தனது முதல் தாக்குதலைத் தொடங்கியது, இராணுவத் தலைவர்கள் மற்றும் உயர் அணு விஞ்ஞானிகளை குறிவைத்தது இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

முதல் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் ஈரானின் முடிவெடுக்கும் மனநிலையை சீர்குலைக்கும் வகையில், அங்குள்ள தளபதிகளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு மிரட்டியுள்ளது.

வெளியான தகவலின் அடிப்படையில், பாரசீக மொழி பேசும் மொசாட் உளவாளிகள் ஈரானில் 20க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ஈரானின் உயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனியின் ஆட்சியைக் கைவிடாவிட்டால் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்று மிரட்டியுள்ளனர்.

ஈரானின் ஒரு மூத்த தளபதியிடம் மொசாட் உளவாளி ஒருவர், உங்கள் மனைவி மற்றும் குழந்தையுடன் தப்பிக்க உங்களுக்கு 12 மணிநேரம் உள்ளது. இல்லையென்றால், நீங்கள் தற்போது எங்கள் பட்டியலில் இருக்கிறீர்கள் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அந்த தளபதியும் மொசாட் உளவாளியின் மிரட்டலுக்கு பணிந்தது போன்று நடித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போதும் அந்த தளபதி உயிருடன் இருக்கிறார் என்பதை Washington Post செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை
உண்மையில் மொசாட் முன்னெடுத்த உளவியல் நெருக்கடி ஈரானிய தளபதிகளிடம் செல்லுபடியாகவில்லை என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படும் என்பதை அறிவித்து, சொல்லியடித்துள்ளனர்.

கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், உயிரபாயம் ஏதும் இல்லை என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அல் உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலை கத்தார் கண்டித்தது, ஆனால் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்ததாகக் கூறியது.

இதனிடையே, இராணுவத்திற்கான இசை ஒலிக்க, கத்தார் மீதான தாக்குதலை ஈரான் அரசு தொலைக்காட்சியில் அறிவித்தது. கத்தாரில் உள்ள தளத்தின் மீது ஈரான் 19 ஏவுகணைகளை வீசியது, அதில் ஒன்று அந்த தளத்தைத் தாக்கியது, ஆனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று கத்தார் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏழு ஏவுகணைகள் ஆரம்பத்தில் ஈரானில் இருந்து ஏவப்பட்டன, அவை அனைத்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீர்நிலைக்கு மேல் கத்தார் வான் பாதுகாப்பு மூலம் இடைமறிக்கப்பட்டதாக மேஜர் ஜெனரல் ஷாயீக் அல் ஹஜ்ரி தெரிவித்துள்ளார்.

பின்னர் ஈரான் மேலும் 12 ஏவுகணைகளை ஏவியது, 11 ஏவுகணைகள் கத்தார் எல்லைக்குள் இடைமறிக்கப்பட்டன, ஆனால் ஒன்று அமெரிக்க தளத்தைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.