தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி மருந்து ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் திங்கள்கிழமை உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் ஆலையில் 90-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தவலறிந்ததும் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் தொடங்கினர். 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியோடு பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, தேசிய மற்றும் மாநில மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் இணைந்தனர்.
ஆலையில் ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 42 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதோடு, ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.