ஜெர்மனி யூதர்களை உளவு பார்க்கிறதா ஈரான்? டென்மார்க்கில் ஒருவர் கைது!

ஈரான் உளவுத் துறைக்காக ஜெர்மனி நாட்டிலுள்ள யூதர்கள் குறித்த தகவல்களைச் சேகரித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் டென்மார்க் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த அலி எஸ், எனும் நபர் ஒருவர் ஈரானின் உளவுத் துறைக்காக, ஜெர்மனி தலைநகர் பெர்லினிலுள்ள யூதக் குடியிருப்புகள் மற்றும் யூதர்களைக் குறித்த தகவல்களைச் சேகரித்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர் அந்தத் தகவல்களின் மூலம் பெர்லினிலுள்ள யூதர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படுவதால், ஜெர்மனியின் உள்நாட்டுப் புலனாய்வுப் பிரிவினர் டென்மார்க் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில், டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரத்தில் கடந்த ஜூன் 26 ஆம் தேதியன்று காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவர் டென்மார்க்கிலிருந்து ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்த விரிவான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
முன்னதாக, ஈரானில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 3 பேருக்கு கடந்த ஜூன் 25 ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.