தில்லியில் தாய், மகன் கொடூரக் கொலை! நடந்தது என்ன?

தில்லி குடியிருப்பில் இருந்து தாய் மற்றும் மகன் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், சடலமாக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
மேலும், குற்றவாளி என சந்தேகிக்கப்படும் இளைஞரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
என்ன நடந்தது?
தில்லி லஜ்பத் நகரைச் சேர்ந்தவர் குல்தீப் (வயது 44). இவர் தனது மனைவி ருச்சிகா (42) மற்றும் மகன் கிரிஷ் (14) ஆகியோருடன் வசித்து வருகிறார். லஜ்பத் பகுதியிலேயே குல்தீப் தம்பதி துணிக்கடை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு குல்தீப் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது கதவு அடைக்கப்பட்டிருந்தது. தனது மனைவிக்கு குல்தீப் போன் செய்த நிலையில், யாரும் அழைப்பை எடுக்கவில்லை.
மேலும், வீட்டின் வாசலிலும் படிக்கட்டுகளிலும் ரத்தக் கறை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குல்தீப், உடனடியாக காவல்துறையின் அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ருச்சிகாவும் கிரிஷும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
இருவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
கொலையாளி யார்?
குல்தீப் நடத்தி வரும் துணிக் கடையில் உதவியாளராகப் பணிபுரியும் முகேஷ் (வயது 24) என்ற இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாக தில்லி தென்கிழக்கு காவல்துறை துணை ஆணையர் ஹேமந்த் திவாரி தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள முகேஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் பணம், நகை உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.