;
Athirady Tamil News

தமிழின படுகொலைக்கு பொறுக்கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் – கஜேந்திரகுமார் எச்சரிக்கை

0

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழின படுகொலைக்கு பொறுப்பு கூற வைப்பது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டுக்கு தமிழ் அரசியல் கட்சிகள் , பொது அமைப்புகள் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தோம்

நாம் அழைப்பு விடுத்தவர்களில் தமிழரசு கட்சியினர் சமூகமளிக்கவில்லை, ஏனைய கட்சியில் இருந்து அவற்றின் பிரதிநிதிகள், மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் , சிவில் சமூகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன படுகொலைக்கு பொறுப்பு கூற வைத்தல் என்பது ஜெனிவாவுடன் முடக்கப்பட்டு விட கூடாது,பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அதனை அவ்வாறே விட்டு விட முடியாது. சாட்சியங்களை இழந்து வருகிறோம். இந்த நிலைமை தொடருமாயின் பொறுக்கூறல் முற்று முழுதாக இல்லாமல் போகும் அபாயம் உண்டு.

அதேவேளை ஐநா அலுவலகம் இந்த அரசாங்கத்திற்கு அங்கீகாரத்தை தேடிக்கொடுக்கும் வகையில் செயற்பட்டு வருகிறது என்ற பரவலான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உள்ளது.

அதேவேளை ஐ. நாவை பலவீனப்படுத்தும் , செயற்பாட்டிலும் , பொறுப்பு கூறல் செயற்பாட்டை முடக்கவும் இந்த அரசாங்கம் புதிய யுக்திகளை கையாளுகின்றன. அதற்கு தெரிந்தோ தெரியாமலோ , தமிழரசு கட்சியும் துணை போகின்றது. அதற்கு செம்மணி மனித புதைகுழி தொடர்பில் தமிழரசு கட்சி அனுப்பிய கடிதத்தை கூறலாம்.

இது தொடர்பில் ஐநா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மனிதவுரிமை ஆணையாளர் அலுவலகம் என்பவற்றில் முறைப்பாடுகளை கையளிக்க உள்ளோம்.

இந்த கூட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அனைத்து கட்சிகள் , மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்டவர்களின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட கடிதத்தில் இருந்து, அதன் முக்கியமான உள்ளடக்கங்களை பெற்று , தற்போதைய கால சூழலுக்கான கோரிக்கைகளையும் உள்ளடக்கி புதிய கடிதத்தை தயாரிக்கவுள்ளோம்.

அதன் மூலம் தமிழ் மக்களின் உண்மையான கோரிக்கை இவை தான் என கூறுவது மாத்திரமின்றி அதற்கு செயல் வடிவத்தை கொடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், மக்களை அணி திரட்டல் செயற்பாடுகளையும் செய்யவுள்ளோம்

புதிதாக நாம் எழுதவுள்ள கடிதம் வெளிவந்த பின்னர் அக்கடிதத்தின் உள்ளடக்கத்தை பார்த்த பின் , இது வரையில் எம்முடன் இணையாதவர்கள் இணைந்து கொள்ள முடியும் என தெரிவித்தார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.