;
Athirady Tamil News

கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்!

0

கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பா் கால்சா இன்டா்நேஷனல், சா்வதேச சீக்கிய இளைஞா் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.

‘பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி அபாயங்கள்’ குறித்த கனடாவின் 2025-ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் ரீதியான வன்முறை பிரிவினைவாதம் பற்றியும் இந்த அறிக்கை விவரிக்கிறது. புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க அல்லது ஏற்கெனவே உள்ள அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வன்முறையைப் பயன்படுத்துவதை இந்தப் பிரிவினைவாத அணுகுமுறை ஊக்குவிக்கிறது.

இந்த வகையின் கீழ், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் உள்பட கனடாவில் தடை செய்யப்பட்ட சில அமைப்புகள், அந்நாட்டிலிருந்து நிதி உதவி பெறுவதாக சட்ட அமலாக்க மற்றும் உளவுத் துறை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற குழுக்கள், வங்கிகள், கிரிப்டோகரன்சிகள், அரசு நிதியுதவி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் நிதி திரட்டுகின்றன. காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்களும் பல நாடுகளில், குறிப்பாக கனடாவில் நிதி திரட்டுவதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்பு கனடாவில் ஒரு பெரிய நிதி திரட்டும் அமைப்பைக் கொண்டிருந்த இந்தக் குழுக்கள், தற்போது சிறிய அளவிலான தனிப்பட்ட நபா்களால் நிா்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் தவறான பயன்பாடு இந்த குழுக்களுக்கு நிதி திரட்டும் ஒரு பொதுவான முறையாக உள்ளது. குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியா்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்ட இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

கனடாவின் உளவுத் துறை அண்மையில் வெளியிட்ட கடந்த ஆண்டு அறிக்கையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறை நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவது, கனடாவுக்கும் அதன் நலன்களுக்கும் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என எச்சரித்திருந்தது. 1980-களின் மத்தியில் இருந்து, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் இருந்து கொண்டு பஞ்சாபில் தனி நாடு அமைப்பதற்காக வன்முறை வழிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது வெளிவந்துள்ள இந்தப் புதிய அறிக்கை, கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சுதந்திரமாக நடத்தி வருகின்றன என்ற இந்தியாவின் நீண்ட கால குற்றச்சாட்டுகளையும், கனடா உளவுத் துறையின் கடந்த ஆண்டு அறிக்கையையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.