சாதாரண தரப் பரீட்சையில் சிறை பாடசாலை மாணவர்கள் படைத்த சாதனை
பாதுக்கை, வட்டரக்க திறந்தவெளி சிறைச்சாலையின் பாடசாலையில் கல்வி கற்ற, தடுப்புக்காவலில் உள்ள 6 மாணவர்கள், இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி பெற்று உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கைதிகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இலங்கையின் ஒரேயொரு பாடசாலையான வட்டரக்க பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையத்தில் இம்மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
உயர்தரத்துக்குத் தகுதி
கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் பல்வேறு சிறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வட்டரக்க சிறைச்சாலையில் உள்ள இந்த பாடசாலையானது, கடந்த 2014ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் கல்வித் திணைக்களம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறைச்சாலை அத்தியட்சகர் ரோஹித செனரத் மஹாநாம, பாடசாலைக்குச் செல்ல முடியாமல் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, பாதிக்கப்பட்ட சிறுவர்களை இலங்கையின் பல்வேறு நீதிமன்றங்கள் எமக்கு அனுப்பி வைக்கின்றன.
அவர்கள் வெவ்வேறு கல்வி மட்டங்களைச் சேர்ந்தவர்கள். நாம் அவர்களுக்கென ஒரு விரைவான கல்வி முறையைத் தயாரித்து கல்வியை வழங்குகிறோம். இது ஒரு விசேட தரத்திலான அரச பாடசாலையாகும்.
இங்கு அதிபர் ஒருவரும் ஆசிரிய குழாமினரும் உள்ளனர். பிள்ளைகளின் கல்வி மட்டங்களுக்கு ஏற்ப நாம் கல்வியை வழங்குகிறோம். இம்முறை நாம் 6 மாணவர்களை பரீட்சைக்கு உட்படுத்தியிருந்தோம். அவர்கள் அனைவரும் சிறந்த முறையில் சித்தி பெற்று உயர்தரத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றார்.