;
Athirady Tamil News

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

0

கேரளத்தின், மலப்புரத்தில் மூளையைத் தின்னும் அமீபா தொற்றுக்கு மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா(Naegleria fowleri) எனும் அமீபிக் மூளைக்காய்ச்சல்(primary amoebic meningoencephalitis) என்ற அரிய வகை தொற்று பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

மலப்புரத்தில் உள்ள வந்தூரைச் சேர்ந்த எம். ஷோபனா கடந்த வியாழக்கிழமை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து மிகவும் ஆபத்தான நிலையிலும், மயக்க நிலையிலும் இருந்தார்.

தீவிர மருத்துவச் சிகிச்சையில் இருந்தபோதிலும், தொற்றுடன் தொடர்புடைய அறிகுறிகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், தொற்று வேகமாகப் பரவியதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த வாரம் 45 வயது ரிதேஷ் என்பவர் அமீபா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அமீபா தொற்றால் 3 மாதக் குழந்தை, 9 வயது சிறுமி உள்பட ஒரே மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும்பாலான பாதிப்புகள் கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. இந்தாண்டு கேரளம் முழுவதும் 42 பேருக்கு அமீபா தொற்று பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

எப்படிப் பரவுகிறது?

சுத்தம் இல்லாத ஆறு, ஏரி, குளம், குட்டைகளில் குளிக்கும்போது மூக்கின் வழியாக மட்டுமே உடலுக்குள் நுழைகிறது. நீச்சல் குளங்களிலும் இருக்கலாம்.

சுத்தமில்லாத தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவும்போதுகூட மூக்கின் வழியாக நுழையலாம்.

நரம்புகள் வழியாக மூளைக்குள் நுழைந்து மூளையின் திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, மூக்கிலிருந்து சளி வெளியேறுதல், கழுத்து இறுக்கம், குழப்பமான நிலை, வலிப்பு, மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகள் இருக்கும்.

சிகிச்சை மேற்கொள்ளாவிடில் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்புள்ளது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது.

இந்த அமீபா நன்னீரில் மட்டுமே உயிர் வாழ்கிறது, உப்புநீரில் இருப்பதில்லை. அசுத்தமான நீரைக் குடிக்கும்போது பரவாது. குளிக்கும்போது அதாவது மூக்கின் வழியாக மட்டுமே பரவுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.