;
Athirady Tamil News

எச்1பி சர்ச்சைக்கு இடையே சீனாவின் கே விசா அறிமுகம்! இளைஞர்களை ஈர்க்கும் சிறப்பம்சங்கள்!

0

எச்1பி விசா கட்டண உயர்வுக்கு இடையே பட்டதாரிகளை ஈர்க்கும் ’கே விசா’வை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.

சீன அரசு தற்போது வழங்கி வரும் 12 வகையான விசாக்களை காட்டிலும், கே விசாவில் பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எச்1பி விசாவுக்கு மாற்று..

அமெரிக்காவில் பணியாற்ற வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ. 88 லட்சமாக அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.

இந்த விசாவால் பயன்பெறுவோர்களில் 71 சதவிகிதத்துடன் இந்தியா முதலிடத்திலும், அடுத்த இடத்தில் சீனாவும் உள்ளன.

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (ஸ்டெம் – STEM) ஆகிய துறையில் பணிபுரிவோருக்காக அமெரிக்காவால் வழங்கப்பட்டு வரும் எச்1பி விசா கட்டண உயர்வால் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஸ்டெம் துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு இளைஞர்களுக்காக கே விசா (K Visa) என்ற புதிய விசாவை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது.

’கே விசா’ சிறப்பம்சங்கள்

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறைகளில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் சீனாவில் பணிபுரிவதற்காக இந்த விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் முன்னேற்றத்துக்கு உலகம் முழுவதும் உள்ள திறமை மிகுந்த வெளிநாட்டு இளைஞர்களை அவசியம் என்று அந்நாட்டு அரசு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது சீனாவில் நடைமுறையில் உள்ள 12 விசாக்களை காட்டிலும் கே விசாவில் அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த விசா வைத்திருப்பவர்களின் நுழைவுகள் எண்ணிக்கை, செல்லுபடியாகும் காலம் மற்றும் தங்கும் காலம் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே விசா வைத்திருப்பவர்கள் சீனாவுக்குள் கல்வி, கலாசாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் பங்கேற்பதோடு, இதுதொடர்பான தொழில் திட்டங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது இளநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம்.

இந்த விசாவுக்கு, வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்த சீன நிறுவனங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கிடையாது. அடிப்படை தகுதியுடைய இளைஞர்கள் தாங்களாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இதன்மூலம், விசா பெற்று சீனாவுக்கு சென்ற பிறகுகூட இளைஞர்களால் வேலையைத் தேடிக் கொள்ள முடியும்.

சீன அரசால், விசா விண்ணப்பிக்கும் இளைஞர்களின் கல்வி, அனுபவம், வயது ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.

இந்த விசாவானது, வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

கட்டணம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மிக குறைந்த அளவிலான கட்டணமே விதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டவர்களை ஈர்க்கும் சீனா

கடந்த சில ஆண்டுகளாக விசா நடைமுறையில் சீனா பல்வேறு தளர்வுகளை அளித்து வருகின்றது. ஜூலை மாத நிலவரப்படி, மொத்தம் 75 நாடுகளுக்கு விசா விலக்கு அளித்துள்ளது சீனா.

இதன் எதிரொலியாக, 2025 ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சீனாவுக்கு வெளிநாடுகளில் இருந்து 3.8 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டைவிட 30.2 சதவிகிதம் பேர் அதிகளவில் பயணித்துள்ளனர். இதில், விசா இல்லாமல் மட்டும் 1.36 கோடி பேர் சீனாவுக்கு பயணித்துள்ளனர்.

இந்த நிலையில், சீனாவின் கே விசாவானது அமெரிக்காவின் எச்1பி விசாவுக்கு போட்டியாகவே கருதப்படுகிறது. எச்1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய இளைஞர்களுக்கு கே விசா ஒரு மாற்று வழியாக அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.