;
Athirady Tamil News

மன்னார் காற்றாலை கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள்

0

கடந்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை திறந்து வைத்தவர்களே இன்று அதற்கு எதிராக போராடுகிறார்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவாகியுள்ளது.

மன்னாருக்கு காற்றாலை இயந்திரங்களுக்கான உபகரணங்களை கொண்டு வருகின்ற பொழுது அங்கு இருக்கின்ற மக்கள் போராடியதாகவும், போராட்டக்காரர்கள் மீது பொலிசார் வன்முறையை ஏவி விட்டு அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. பெரிய அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினை என்பது ஜனாதிபதி மற்றும் அதற்குரிய அமைச்சர் அனைவரோடும் பேசப்பட்டது. கலந்துரையாடப்பட்டபோது எடுக்கப்பட்ட முடிவுகளின் படி தற்போது அமைக்க இருக்கின்ற 14 காற்றாலை கோபுரங்களும் குழிகள் தோண்டப்பட்டு இருக்கின்றன.

அடிக்கட்டுமாண வேலைகள் முடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டிருக்கிறது. அவற்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் மாத்திரமே மிச்சமிருக்கிறது.
அந்தப் பணிகளை செய்து முடிப்பதற்கான சந்தர்ப்பத்தை தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இன்றைக்கு இதனை பூதாகரமான போராட்டமாக கிளப்புவதற்கான ஒரு சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள் யார் என்று பார்த்தால், முன்னர் அந்த மாவட்டத்தில் காற்றாலை மின் நிலையத்தை அமைத்து கோபுரங்களை சென்று திறந்து வைத்தவர்கள்,அதற்குப் பின்னால் நின்று வக்காலத்து வாங்கியவர்கள், மக்களிடம் காணிகளை வாங்கிக் கொடுத்தவர்கள், அந்த நிறுவனங்களோடு கொடுக்கல் வாங்கலை செய்தவர்களே இன்று இந்த போராட்டத்தின் பின்னால் இருக்கிறார்கள்.

இதை நான் சொல்லவில்லை. சமூக வலைத்தளங்கள் நேரடியாக இதனை அம்பலமாக்கி கொண்டு இருக்கிறது. இந்தப் போராட்டம் என்பது யாருக்காக? எதற்காக மன்னரை மீட்பதற்காகவா? மன்னாரை மீட்பதில் எங்களை விட அக்கறை கொள்வதற்கு வேறு யாரும் இல்லை.

மன்னாருக்கு அதிகளவான பாதிப்பு ஏற்படுவது கனிய மண் அகழ்வின் மூலமே தான். அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். காற்றாலை மின் நிலையம் அமைப்பது என்பது அது செய்து முடித்த வேலை. அதனால் மக்களிடம் நாம் ஒன்றை கேட்கின்றோம்.

உலகம் முழுவதும் தேடி பார்க்கின்றபோது இலங்கையில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை கோபுரங்களை சென்று பாருங்கள். அந்த பிரதேசங்களை சென்று பாருங்கள். அந்தப் பிரதேசத்தில் மீன்கள் வரவில்லையா? உயிரினங்கள் வரவில்லையா? பறவைகள் வரவில்லையா? இயற்கைக்கு மாசு ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள். அவ்வாறு மாசு ஏற்பட்டிருக்குமாக இருந்தால் தாக்கம் ஏற்பட்டிருக்குமாக இருந்தால் அது விஞ்ஞான ரீதியாகவும் தர்க்கரீதியாக நிரூபிக்கப்படுமாக இருந்தால் நாங்களும் உங்களோடு சேர்ந்து போராடுவதற்கு தயார் – என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.