மடகாஸ்கரில் தீவிரமடையும் ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம்! நாடாளுமன்றம் கலைப்பு!
மடகாஸ்கரில் ஜென் ஸீ இளைஞர்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதுடன் அதிபரும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள தீவு நாடான மடகாஸ்கரில் மின்தடை மற்றும் குடிநீர் பற்றாக்குறை உள்ளிட்ட அத்தியாவசியப் பிரச்னைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரசுக்கு எதிராக கடந்த செப்டம்பரின் பிற்பாதியில் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் மேலும் தீவிரமடைந்து, ஊழல், மோசமான நிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிரானதாக பூதாகரமாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, தலைநகர் ஆண்டனாநரிவோவில் அந்நாட்டு இளைஞர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மடகாஸ்கர் ராணுவமும் கைகோத்துள்ளதால் அங்கு அசாதாரண சூழல் நிலவுகிறது. இதனைத்தொடர்ந்து, அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக். 12) மடகாஸ்கரில் இருந்து வெளியேறிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், மடகாஸ்கரில் இளைஞர்களின் போராட்டத்தின் எழுச்சியாலும் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கைகளின் எதிரொலியாலும், மடகாஸ்கர் தேசிய சட்டப்பேரவையை கலைக்க உத்தரவிட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமை(அக். 14) அவர் காணொலியொன்றின் மூலம் தெரிவித்தார்.