மயக்க ஊசி செலுத்தி மனைவியை கொன்ற டாக்டர்.. சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்கள்
பெங்களூரு மாரத்தஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனேகொலல் அய்யப்பா லே-அவுட் 4-வது கிராசில் வசித்து வருபவர் முனிரெட்டி. இவருக்கு நிகிதா மற்றும் கிருத்திகா ரெட்டி(வயது 29) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் 2 பேரும் டாக்டர்கள் ஆவார்கள். கிருத்திகா ரெட்டிக்கும், மகேந்திர ரெட்டிக்கும் கடந்த ஆண்டு(2024) மே மாதம் 6-ந் தேதி திருமணம் நடைபெற்றது. பெங்களூருவில் தம்பதி வசித்து வந்தனர்.
மகேந்திர ரெட்டி, பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். அதே ஆஸ்பத்திரியில் தான் கிருத்திகா ரெட்டியும் டாக்டராக பணியாற்றினார். இதற்கிடையில், உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த கிருத்திகா ரெட்டி கடந்த ஏப்ரல் மாதம் அய்யப்பா லே-அவுட்டில் உள்ள தனது தந்தையின் வீட்டுக்கு வந்திருந்தார்.
ஏப்ரல் மாதம் 23-ந் தேதி இரவு மகேந்திர ரெட்டியும், கிருத்திகா ரெட்டியும் ஒன்றாக இருந்தனர். அப்போது திடீரென்று கிருத்திகா ரெட்டி கூச்சலிட்டபடி மயக்கம் அடைந்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிருத்திகா ரெட்டியை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் மாரத்தஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது கிருத்திகா ரெட்டி குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் அஜீரண கோளாறு, வாயு தொல்லை உள்ளிட்ட காரணங்களால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக சிகிச்சை பெற்றதாகவும், ஆனால் உயிரிழந்து விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்தனர். அதாவது கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் தான் உயிரிழந்திருப்பதாக குடும்பத்தினர் நம்பினார்கள். மேலும் போலீசில் புகார் அளிக்கவும் முன்வரவில்லை.
என்றாலும், மாரத்தஹள்ளி போலீசார் வலியுறுத்தலின்பேரில் கிருத்திகா ரெட்டியின் அக்காள் நிகிதா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்தார்கள். இந்த நிலையில், கிருத்திகா ரெட்டி உயிரிழந்து 6 மாதங்களுக்கு பின்பு அவரது கணவரான டாக்டர் மகேந்திர ரெட்டியை மாரத்தஹள்ளி போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது கிருத்திகா ரெட்டி உடல்நலக்குறைவால் மரணம் அடையவில்லை, அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறி மகேந்திர ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிக்கியது எப்படி?
மேலும் கிருத்திகா ரெட்டி சாவில் 6 மாதங்களுக்கு பின்பு மகேந்திர ரெட்டி சிக்கியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்களும் வெளியாகி உள்ளது.
அதாவது கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் இறந்திருப்பதாக நினைத்து குடும்பத்தினர் புகார் அளிக்காமல் இருந்தாலும், போலீசாரின் வற்புறுத்தலால் புகார் அளித்திருந்தனர். போலீசாரும் கிருத்திகா ரெட்டியின் உயிரிழப்புக்க்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க, சில மாதிரிகள் பெற்று, தடய அறிவியல ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். அதன்படி, 6 மாதங்களுக்கு பின்பு தடய அறிவியல் அறிக்கை மாரத்தஹள்ளி போலீசாருக்கு கிடைத்திருந்தது.
அதில், கிருத்திகா ரெட்டி உடல் நலக்குறைவால் சாகவில்லை என்றும், அவருக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, டாக்டரான மகேந்திர ரெட்டியை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவல்கள் போலீசாரை பதற வைத்தது. அதாவது கிருத்திகா ரெட்டிக்கு குறைந்த ரத்த அழுத்தம், அஜீரண கோளாறு, வாயு தொல்லையால் அவதிப்படுவது உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பது பற்றி திருமணத்திற்கு முன்பாக கிருத்திகா ரெட்டியின் பெற்றோர் மகேந்திர ரெட்டிக்கு தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
இதுபற்றி திருமணத்திற்கு பின்பு மகேந்திர ரெட்டிக்கு தெரியவந்துள்ளது. மேலும் கிருத்திகா ரெட்டிக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்ததால், அவரை கொலை செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய மகேந்திர ரெட்டி முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவுக்காக ஓய்வெடுக்க பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த கிருத்திகா ரெட்டிக்கு ஏப்ரல் 21-ந் தேதியில் இருந்து தொடர்ந்து மயக்க ஊசியை மகேந்திர ரெட்டி செலுத்தி வந்துள்ளார்.
இதனால் அவர் ஏப்ரல் 23-ந் தேதி இரவு உயிரிழந்திருந்தார். மாமனார் வீட்டில் வைத்தே மனைவியை கொலை செய்துவிட்டு, யாருக்கும் சந்தேகம் வராத வண்ணம் மகேந்திர ரெட்டி நடந்து கொண்டு இருந்தார். ஆனால் டாக்டராக இருந்தாலும் தடய அறிவியல் அறிக்கை காட்டி கொடுத்ததால் போலீசாரிடம் மகேந்திர ரெட்டி சிக்கியுள்ளார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு காவலில் எடுத்து விசாரித்து வருவதாக போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.