330 பாலஸ்தீனர் உடல்களை ஒப்படைத்த இஸ்ரேல்! அடையாளம் காண முடியாமல் தவிக்கும் குடும்பங்கள்!
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உயிரிழந்த மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்கள் காஸா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
காஸாவில், கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த போரானது, அக்.10 ஆம் தேதி ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கும், இஸ்ரேல் அரசுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் நிறுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஹமாஸ் ஒப்படைக்கும் ஒவ்வொரு இஸ்ரேலியரின் உடலுக்கு நிகராக, 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் அரசு ஒப்படைத்து வருகின்றது.
இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு சிறைப்பிடிக்கப்பட்ட மேனி கோடார்ட் எனும் இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவரின் உடலை நேற்று முன்தினம் (நவ. 13) இரவு ஹமாஸ் படையினர் இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இதுவரை, இஸ்ரேலிடம் 25 இஸ்ரேலிய பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் படையினர் ஒப்படைத்துள்ளனர். இத்துடன், ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருந்த 20 பிணைக் கைதிகளும் நேற்று இஸ்ரேல் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தின் அடிப்படையில் தங்களது கட்டுப்பாட்டில் கொல்லப்பட்ட மேலும் 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இன்று இஸ்ரேல் அரசு காஸா அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக, கான் யூனிஸ் பகுதியிலுள்ள நாசர் மருத்துவமனை அறிவித்துள்ளது. இதன்மூலம், இஸ்ரேல் ஒப்படைத்துள்ள பாலஸ்தீனர் உடல்களின் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளன.
இந்த உடல்கள் அனைத்தும் முறையாகப் பதப்படுத்தப்படாமல் நீண்ட காலமாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அடையாளம் காணமுடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் ஒப்படைத்துள்ள 330 உடல்களில் இதுவரை 95 உடல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதனால், இஸ்ரேல் படைகளினால் கைது செய்யப்பட்டு மாயமான ஏராளமான பாலஸ்தீனர்களின் நிலைக்குறித்து அறியாத அவர்களின் உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டு வரும் உடல்களில் தங்களது குடும்பத்தினர் உள்ளனரா என்பதை அறிய நாசர் மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.
ஆனால், இஸ்ரேலின் தாக்குதல்களில் காஸா சுகாதாரத் துறை கட்டமைப்புகள் முழுவதுமாகச் சேதமடைந்துள்ளதாலும், போதுமான டி.என்.ஏ. பரிசோதனைக் கருவிகள் இல்லாததினாலும் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.