இதுவரை பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் 03 மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் – அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்
முதியோர் பராமரிப்பு சேவை தொடர்பான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,
முதியோர் இல்லங்களில் பராமரிப்பு நிலைமைகள் தொடர்பில் தெளிவூட்டும் நோக்கில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 13 முதியோர் இல்லங்கள் இயங்கிவருவதாகவும் இதில் மூன்று முதியோர் பாரமரிப்பு நிலையங்கள் இதுவரையில் எந்தவித பதிவினையும் மேற்கொள்ளாமல் இயங்கி வருவதாகவும், இந்த முதியோர் இல்லங்கள் உடனடியாக மூன்று மாத கால அவகாசத்திற்குள் பதிவினை மேற்கொள்ள தவறும் பட்சத்தில் எந்த விதமான முன்னறிவித்தலும் இல்லாமல் இடைநிறுத்தப்படும் என்றும், முதியோர் பராமரிப்பு நிலையங்களை பொறுத்தமட்டில் இன்று தேவைக்குரிய விடயமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், முதியோர் இல்லங்கள் சரியா வகையில் முதியோர்களை பராமரிக்க வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும், குறிப்பாக முதியோர் இல்லங்கள் உடல் பராமரிப்பில் மட்டும் அக்கறை காட்டாமல் அவர்களின் உள ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும் எனவும், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் இரு மாதங்களுக்கு ஒரு முறையாவது இவ்வாறான உள ஆற்றப்படுத்துகை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டதுடன், இதற்கு மேலாக முதியோர் இல்லங்கள் தொடர்கில் சில முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதாவது முதியோர் இல்லங்களில் கடமையாற்றும் உழியர்கள், முகாமையாளர் முன்னிலையில் பாராமரிக்கும் விதத்திற்கும் முகாமையாளர் இல்லாத வேளையில் நடந்து கொள்ளும் விதத்திற்கும் இடையில் வேறுபாடு காணப்படுவதாகவும், சில ஊழியர்கள் முதியோர்களுடன் மரியாதையற்ற சொற் பிரயோகத்தை மேற்கொள்வதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்து அதில் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
முதியோர் இல்லங்களில் வசிக்கும் சமூகத்தை பராமரிக்கவும் அவர்களின் உடல் சமூக மற்றும் உளத் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் சிறந்த மற்றும் சிறந்த வாழ்க்கைத்தரத்தினை அடையும் நோக்கில் இந்த பயிற்சி பட்டறை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட முதியோர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஸ்ரெல்பன் பாலகுமாரி கலந்து கொண்டார்.
இப் பயிற்சி பட்டறையின் இன்றைய வளவாளராக யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி குமாரசுவாமி கெதீஸ்வரன் கலந்துகொண்டதுடன், மாவட்டத்தில் இயங்கும் 13 முதியோர் இல்லங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


