;
Athirady Tamil News

நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் தடை? ரஷிய அரசு அறிவிப்பு!

0

ரஷியாவில், நாடு முழுவதும் வாட்ஸ் ஆப் செயலியைத் தடை செய்ய திட்டமிட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான “வாட்ஸ் ஆப்” செயலியை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ரஷிய சட்டங்களுக்கு உடன்படாதது மற்றும் குற்றங்களைத் தடுக்காதது உள்ளிட்ட காரணங்களினால் நாடு முழுவதும் “வாட்ஸ் ஆப்” செயலி விரைவில் தடை செய்யப்படக் கூடும் என ரஷிய அரசு நேற்று (நவ. 28) அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ரஷிய மக்கள் ‘மேக்ஸ்’ எனப்படும் உள்நாட்டு செயலியைப் பயன்படுத்த வேண்டுமென ரஷிய அரசு வலியுறுத்தி வருகின்றது.

ஆனால், இந்தச் செயலியானது புதியதாக விற்பனைச் செய்யப்படும் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்கெனவே பதிவிறக்கப்பட்டு வருவதாகவும், இந்தச் செயலி பயனாளர்களின் தகவல்களை ரஷிய அரசுக்கு வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில், பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் மோசடி குறித்த விசாரணைக்கு வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகள் தங்களது பயனாளர்களின் தகவல்களை வழங்கவேண்டும் என ரஷிய அதிகாரிகள் வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தத் தகவல்களின் மூலம் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் விமர்சகர்கள் குறிவைக்கப்படுவார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து, மெட்டா நிறுவனம் கூறுகையில், பாதுகாப்பான முறையில் தொலைத்தொடர்பு செயலிகளைப் பயன்படுத்துவதற்கான மக்களின் உரிமையை அத்துமீற ரஷிய அரசு முயன்றுவருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஆகஸ்ட் மாதம் வாட்ஸ் ஆப் செயலி மூலம் செல்போன் அழைப்புகளைப் பேசும் வசதியை ரஷிய அரசு நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.