;
Athirady Tamil News

கனடாவில் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட இந்திய இளம்பெண்: திடுக் தகவல்

0

கனடாவில் இந்திய இளம்பெண் ஒருவர் விபத்தொன்றில் பலியான நிலையில், உண்மையில் அது விபத்து அல்ல, கொலை என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த இந்திய இளம்பெண்
பஞ்சாபிலுள்ள Gujjarwal என்னுமிடத்தைச் சேர்ந்த மன்தீப் கௌர் க்ரெவால் (Mandeep Kaur Grewal, 30) என்னும் இளம்பெண் கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெற்று வாழ்ந்துவந்தார்.

மார்ச் மாதம் மன்தீப்புக்கு அன்மோல் ஜீத் சிங் (Anmol Jeet Singh) என்பவருடன் திருமணமாக, இருவருமாக பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள டெல்டா என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தார்கள்.

இந்நிலையில், சென்ற மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 26ஆம் திகதி, மன்தீப் பயணித்த கார் விபத்தொன்றில் சிக்கி தீப்பிடித்து எரிந்தது.

அந்த விபத்தில் மன்தீப் பலியானதாக இந்தியாவிலிருக்கும் அவரது உறவினர்களுக்கு தகவலளிக்கப்பட, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால், பொலிசாருக்கு அந்த விபத்து குறித்து சந்தேகம் ஏற்படவே, அவர்கள் பெரிய அளவில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

விசாரணையைத் தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. அதாவது, மன்தீப் விபத்தில் உயிரிழக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதுதான் அந்த செய்தி.

அத்துடன், மன்தீப்பைக் கொலை செய்ததாக, மன்தீப்பின் கணவரான அன்மோல் ஜீத் சிங்கின் சகோதரரான குர்ஜோத் சிங் கைரா (Gurjot Singh Khaira) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கள் மகள் விபத்தில் உயிரிழந்ததாக கிடைத்த செய்தியால் சோகத்தில் ஆழ்ந்திருந்த மன்தீப்பின் பெற்றோர், தற்போது தங்கள் மகள் கொலை செய்யப்பட்டதாக கிடைத்துள்ள செய்தியால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அத்துடன், மன்தீப்பை கைரா எதற்காக கொலை செய்தார் என்பதும் புரியாமல் இரு குடும்பத்தினரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள கைரா, டிசம்பர் மாதம் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.