;
Athirady Tamil News

நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல்

0

காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அனர்த்தத்தின் பின்னரான காலப்பகுதியில் உணவு, நீர் மூலம் பரவும் நோய்களும்; நுளம்புகள் மூலம் பரவும் நோய்களும்; தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் பரவக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே, பொதுமக்கள் மேற்படி நோய்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குடிப்பதற்கு கொதித்தாற வைத்த நீரை அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பருகவும்.

எப்போதும் நன்றாக சமைத்த உணவுகளை உட்கொள்ளவும். அதே வேளை சமைக்காமல் நேரடியாக உண்ணும் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை நன்றாக நீரில் கழுவ வேண்டும்.

சமைத்த உணவை ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும்.

உணவு சமைப்பதற்கு முன்பும், சாப்பிட முன்பும், மலம் கழித்த பின்பும் நன்றாக சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவ வேண்டும்.

மலம் கழிப்பதற்காக மலசலகூடங்களைப் பாவிக்கவும்.

சிறுவர்களது மலக்கழிவையும் மலசலகூடக் குழியினுள் போடவும்.

கிணறுகளுக்கு குளோரின் இட்டு கிருமி நீக்கம் செய்யவும்.

வெள்ள நீரில் நடப்பதையோ அல்லது விளையாடுவதையோ இயலுமான வரை தவிர்க்கவும்.

எமது வீட்டின் சுற்றாடலில் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து துப்பரவாகப் பேண வேண்டும்.

எமது வீடுகளில் சேரும் திண்மக்கழிவுகளை உரிய முறையில் அகற்ற வேண்டும்.

இக்காலப்பகுதியில் காய்ச்சல், இருமல், வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும் என அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.