யாழில் சிறப்பாக இடம்பெற்ற கலைமுகம் அமுதமலரின் உரையாடல் அரங்கு
யாழில் சிறப்பாக இடம்பெற்ற கலைமுகம் அமுதமலரின் உரையாடல் அரங்கு
கலைமுகம் இதழின் அமுதமலரின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான உரையாடல் அரங்கு நேற்று 14.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூதுக் கலையகத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்துகொண்டிருக்கும் திருமறைக் கலாமன்றத்தின் கலை இலக்கியக் காலாண்டிதழான கலைமுகம், அதன் 80 ஆவது இதழான அமுதமலர் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், நூல் மதிப்பீடுகள், பத்தி என சிறப்பு தொகுப்பாக வெளிவந்துள்ளது.
நா.நவராஜ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஆரம்ப உரையினை திருமறைக்கலாமன்றத்தின் பிரதி இயக்குனரான ஜோன்சன் ராஜ்குமார் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நா.நவராஜ் அவர்களது தலைமையுரையை தொடர்ந்து ரக் ஷானா ஷரிபுத்தீன், சி.விமலன் ஆகியோர் அமுதமலரில் வெளிவந்த சிறுகதைகள் குறித்தும் அதன் உள்ளடக்கங்களை செம்மையாக விபரித்தும் பேசியிருந்தனர்.
தொடர்ந்து நேர்காணல், பத்தி தொடர்பில் பேராசிரியர் சி.ரகுராம் அவர்களும் கட்டுரைகள் பற்றி ந.குகபரன், தி.செல்வமனோகரன் அவர்களும் பேசியிருந்தனர்.
தொடர்ந்து அமுதமலரில் வெளியான கவிதைகள் பற்றி சு.குணேஸ்வரன் அவர்களும் பேசியிருந்தார்.
தொடர்ந்தும் வாசகர்கள் சார்பில் கவிஞர் சோ. பத்மநாதன் அவர்களும் அறிந்திரன் இதழின் ஆசிரியர் கணபதி சர்வானந்தா கருத்துரையை வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து செல்மர் எமில் அவர்களின் ஏற்புரையும், நன்றியுரையுடனும் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவடைந்தன.
பேச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக நேரமுகாமைத்துவத்தை பின்பற்றி நிறைவடைந்த இந் நிகழ்வில் கலைமுகம் இதழின் வாசகர்கள், படைப்பாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

