;
Athirady Tamil News

இலங்கை பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை ; குழந்தைகள் தொடர்பில் அவதானமாயிருங்கள்

0

காய்ச்சலால் பாதிக்கப்படும் குழந்தைகளை தாமதமின்றி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

பெற்றோருக்கு அறிவுறுத்தல்
அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் தீவிரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், வைத்தியசாலையின் கொள்ளளவை விட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், வீடுகளில் வைத்து சுயமாக சிகிச்சையளிப்பதைத் தவிர்த்து, தாமதமின்றி அருகிலுள்ள அரசாங்க வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டிலேயே கை வைத்தியம் செய்வதன் மூலம் குழந்தைக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான முக்கியமான நேரம் வீணாகக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ள விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர, குழந்தைகளின் உயிரை தேவையற்ற ஆபத்தில் ஆழ்த்தாமல் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் நாட்டின் இந்த ஆண்டில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 81,511 ஆக உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 61 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் இந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.

அதற்கமைய, இம்மாதத்தின் கடந்த சில நாட்களில் மட்டும் 26,136 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜூன் மாதத்திலும், ஜூலை மாதத்தின் இதுவரை வரையான காலப்பகுதியிலும் மட்டும் 47,670 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது அத்துடன், நாட்டில் தற்போது 175 அதி அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.