யாழ்ப்பாணத்தை அண்மிக்கும் தாழமுக்கம் ; விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட முக்கிய தகவல்
வங்காள விரிகுடாவில் மட்டக்களப்புக்கு கிழக்காக காணப்படும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிழக்கு மாகாணக் கரையோரமாக வடக்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து யாழ்ப்பாணத்திற்கு அண்மிக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தனது முக புத்தக பதிவில் தெரிவித்துள்ளார்.
இது யாழ்ப்பாணத்தினை அண்மிக்கும் போது வலுக்குறைந்து தாழ்வு நிலையாகவே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே மலையக மக்கள் அச்சப்பட தேவையில்லை ஆனால் மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் எதிர்வரும் 11.01.2026 வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்காள விரிகுடாவில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது மட்டக்களப்புக்கு கிழக்காக 116 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அதன் வெளிவலய முகில்கள் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை தொட ஆரம்பித்துள்ளன. கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பதிவாக தொடங்கியுள்ளது.
காற்றும் வேகமாக வீசத் தொடங்கியுள்ளது. ஆகவே அடுத்த வரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணத்திற்கும் முக்கியமானவை. எனவே கனமழை, வேகமான காற்று வீசுகை தொடர்பில் தயவு செய்து மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.