முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துக்களை உக்ரைனுக்கு வழங்க புடின் ஒப்புதல்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் மறுசீரமைப்புக்காக முடக்கப்பட்ட சொத்துகளை வழங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
மாஸ்கோவில் நடைபெற்ற ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பின், அமெரிக்காவில் முடக்கப்பட்ட ரஷ்ய சொத்துகளை போரால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டமைக்க பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், காசா பிரதேசத்தில் அமைதி திட்டத்தை மேற்பார்வையிட ட்ரம்ப் முன்னெடுத்த “Board of Peace” அமைப்பிற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் சிறப்பு தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் மாஸ்கோவில் புதினை சந்திக்கவுள்ள நிலையில் வெளியாகியுள்ளது.
அவர்கள், உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணும் வழிகளைப் பற்றி விவாதிக்க உள்ளனர்.
புதின் கூறியதாவது: “அமெரிக்காவில் உறைந்துள்ள எங்கள் சொத்துகளில் மீதமுள்ள தொகையை, போரால் சேதமடைந்த உக்ரைன் பகுதிகளை மீளக் கட்டமைக்க பயன்படுத்தும் வாய்ப்பை, அமெரிக்க நிர்வாகத்துடன் கலந்துரையாடி வருகிறோம்.”
இந்த நடவடிக்கை, ரஷ்யா-உக்ரைன் இடையிலான நீண்டகால மோதலுக்கு அமைதி தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.