;
Athirady Tamil News

அனைத்து மின் விளக்குகளும் அணைந்த தருணம் ; கிளிநொச்சி நீதிமன்றத்தில் மரண தண்டனை

0

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால், கடந்த 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்தின் பிரதான குற்றவாளிக்கு இன்று (02-02-2026) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் இடம்பெற்ற குறித்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கிடைத்த தகவல்களின் படி, கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11 ஆம் திகதியன்று, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அர்ச்சுனன் ரஜீபன் என்ற 19 வயதுடைய இளைஞர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ததுடன், இரத்த மாதிரிகள் உள்ளிட்ட சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும், பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரையின் பேரில் வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் தொடர்ந்தன.

அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று குறித்த வழக்கு தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, எதிர் தரப்பு சட்டத்தரணி S. ஸ்ரீகாந்தா முன்னிலையில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

இதன் போது, “மன்றிற்கு ஏதேனும் கூற விரும்புகிறீர்களா?” என குற்றவாளியிடம் கேள்வி எழுப்பி அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட பின்னர், நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு, அனைவரும் எழுந்து நின்ற நிலையில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.