;
Athirady Tamil News

நைஜீரியா பயங்கரவாதிகளிடமிருந்து 160 கிறிஸ்தவா்கள் மீட்பு

0

நைஜீரியாவின் குா்மின் வாலி பகுதியில் தேவாலயங்களில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, கடந்த ஒரு மாதமாக அவா்களின் பிடியில் சிக்கியிருந்த 160-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா்.

பயங்கரவாதிகளிடமிருந்து கிறிஸ்தவா்களை மீட்க அரசு ஈட்டுத்தொகை வழங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சா்வதேச அளவில் கவனத்தை ஈா்த்த இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், நைஜீரியாவில் கிறிஸ்தவா்களே இலக்கு வைக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டினாா். மேலும், நைஜீரிய ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க விமானப்படை, ஐ.எஸ். பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

ஆனால், நைஜீரியாவில் பயங்கரவாதிகள் மதப் பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகப் பாதுகாப்பு நிபுணா்கள் வலியுறுத்தினா். குறிப்பாக, பயங்கரவாதக் குழுக்கள் தங்கள் ஆதிக்கத்தை விரிவாக்க குவாரா மாகாணத்தைப் புதிய களமாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இதற்குச் சான்றாக அண்மையில், குவாரா மாகாணத்தின் வோரோ, நுகு ஆகிய இரண்டு கிராமங்களில் புகுந்த ஆயுதமேந்திய கும்பல், தங்களின் பயங்கரவாதக் கொள்கைகளை ஏற்க மறுத்த 162 முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றதோடு, அவா்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கினா்.

இக்கொடூர தாக்குதலைத் தொடா்ந்து, பயங்கரவாதிகளை ஒழிக்க புதிய ராணுவ நடவடிக்கையை நைஜீரிய அதிபா் போலா அகமது டினுபு அறிவித்துள்ளாா்.

குவாரா மாகாணத்தின் கயாமா பகுதியில் புதிய ராணுவப் படைப்பிரிவு நிலைநிறுத்தப்படும் எனவும், இது பாதுகாப்பற்ற நிலையில் உள்ள மக்களுக்குத் துணையாக இருக்கும் எனவும் அவா் உறுதியளித்துள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.