;
Athirady Tamil News

யாழ். இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு: காங்கேசன்துறை முதலீட்டு வலயத் திட்டம் குறித்து தீவிர கலந்துரையாடல்

0
முதலீட்டு வலயம் மூலம் இளைஞர்கள் யுவதிகளுக்கு எவ்வாறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான சாதக பாதகங்களை ஆராய்வதிலேயே வெற்றி தங்கியுள்ளது – அரசாங்க அதிபர்
காங்கேசன்துறையில் அமையவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான கருத்து பகிர்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (10.02.2026) காலை 09.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் காங்கேசன்துறை முதலீட்டு வலயம் தொடர்பான சாத்தியப்பாடுகள் கண்டறிந்த யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் குழுவினர் சார்பில் மருத்துவபீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமார், பேராசிரியர் பி. ஐங்கரன், பேராசிரியர் ரி. முகுந்தன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஈ. வை. ஏ. சார்ள்ஸ், கலாநிதி சாதனா வைத்தியநாதன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.

இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய பகுதிகளில் முதலீட்டு வலயங்களை அமைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெல்லிப்பளை காங்கேசன்துறை பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு வலயம் தொடர்பான கலந்துரையாடலாக இது அமையவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள முதலீட்டு வலயங்களின் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவினர் அதன் சாதக பாதக தன்மைகளை ஆராய்ந்து அது தொடர்பான தெளிவுபடுத்தல்களை வழங்கி கருத்துக்களை பரிமாறவுள்ள கலந்துரையாடலாக அமைய வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

மேலும் கைத்தொழில் துறை சார்ந்த கோப்பாய் பிரதேசத்தில் காணப்படும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டை பகுதியில் 65 ஏக்கர் காணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 25 ஏக்கர் அபிவிருத்தி செய்யப்பட்ட நிலையில் அதில் உள்ளூர் முதலீடுகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து இயங்கி வருகின்ற போதும் வளப்பற்றாக்குறை காரணமாக முழுமையான வளர்ச்சி பெற்றுக் கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் முதலீட்டு வலயத்தை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச தர ரீதியாக உற்பத்தி சார்ந்த விடயங்களை இந்த முதலீட்டு வலயத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்காக அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்குரிய அனுமதிகள் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின் இணைப்புக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்  பிமல் ரத்நாயக்க அவர்கள் மற்றும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர் நேரடியாக சென்று ஆராய்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் முதலீட்டு வலயம் மூலம் இளைஞர்கள் யுவதிகளுக்கு எவ்வாறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பாகவும் அதன் சாதக பாதகத் தன்மைகளை ஆராய்வதன் மூலமாக இத் திட்டங்கள் வெற்றி அளிக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடலை ஆக்கபூர்வமாக கருத்துக்களை வழங்கி சிறப்பாக நடைபெற அனைவரது ஒத்துழைப்புகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்ட அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில் காங்கேசன்துறை அமையவுள்ள முதலீட்டு வலயத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள், பொருளாதார நன்மைகள், வேலைவாய்ப்புக்களின் சாத்தியப்பாடுகள், கிடைக்கக்கூடிய உள்ளூர் மூலப்பொருட்கள், சவால்கள் போன்ற விடயங்கள் ஆரோக்கியமான முறையில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வலி வடக்கு பிரதேச சபையின்   தவிசாளர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம பொறியியலாளர் ,விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், இலங்கை முதலீட்டுச் சபையின் உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசனம், மின்சார சபை, புகையிரதம், தொலைத்தொடர்பு, இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட தொடர்புடைய திணைக்களத்தின் பிரதிநிதிகள், வணிகர் கழகத்தின் தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.