வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
வயல்வெளியில் இருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று (1) மரணமடைந்தவர் சம்மாந்துறை-10 சாலி வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஆதம்பாவா றியால் ஆவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை(31) மாலை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிக்கு சென்ற நிலையில் உயிரிழந்த குடும்பஸ்தர் காணாமல் சென்றிருந்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் அல் அமீர் பாடசாலைக்கு பின்புறமாக உள்ள வயல்வெளி பகுதியில் அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் ஊடாக சம்மாந்துறை பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.
அத்துடன் அங்கு சென்ற சம்மாந்துறை பொலிஸார் புலன்விசாரணைகளை முடக்கி விட்டிருந்ததுடன் உயிரிழந்தவரின் சடலத்தை பின்னர் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் உத்தரவிற்கமைய திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.
பின்னர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனையில் தீடீர் மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டது.
மேலும் உயிரிழந்தவருக்கு நான்கு வருடத்திற்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இருதய சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.பின்னர் தொடர்ச்சியாக சிகிச்சைக்கு செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் ஆலோசனைக்கு அமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதிப்குமார நெறிப்படுத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
