;
Athirady Tamil News

அலி காமேனி படுகொலை; மசூதியில் சிவப்பு கொடியை பறக்கவிட்ட ஈரான்… காரணம் என்ன?

0

தெஹ்ரான்,

ஈரான் அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த வேண்டும், யுரேனியம் செறிவூட்டலை நிறுத்த வேண்டும், நீண்ட தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை திட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் தனது கிளர்ச்சி படைகளின் செயல்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார்.

ஆனால் இதற்கான ஒப்பந்தத்தில் ஈரான் கையொப்பமிட மறுத்தது. இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்து, ஈரான் உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஈரானைச் சுற்றி அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைந்தன.

இதனால் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவிய நிலையில், நேற்று இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. ஈரானில் தலைநகர் தெஹ்ரான் உள்பட பல இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. காமேனி கொல்லப்பட்டதால் ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது. ஈரான் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

தெஹ்ரானில் உள்ள காமேனியின் இல்லம் தரைமட்டமாக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அலி காமேனி உயிரிழந்ததையடுத்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரானின் காம் நகரில் உள்ள ஜம்கரன் மசூதியின் மேல் சிவப்பு கொடி பறக்க விடப்பட்டுள்ளது. இந்த மசூதி ஈரானின் முக்கியமான மத வழிபாட்டுத் தளமாகும். இந்நிலையில், இந்த ஜம்கரன் மசூதி மீது சிவப்பு கொடி பறக்கவிடப்பட்டிருப்பதற்கு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

மசூதியின் மீது ஏற்றப்பட்ட சிவப்பு கொடி, கோபம் மற்றும் பழிதீர்க்கும் லட்சியத்தை குறிக்கிறது. ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு நியாயம் தீர்க்க இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளாதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.