துருக்கியில் நிலநடுக்கம் – ரிக்டர் 5.5 அளவாக பதிவு
அங்காரா,
துருக்கி நாட்டின் மத்தியப் பகுதியில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாகப் பதிவான இந்த நில நடுக்கம், டோகாட் மாகாணத்தில் உள்ள நிக்சார் நகரை மையமாகக் கொண்டு தாக்கியது. பூமிக்கு அடியில் சுமார் 7 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த அதிர்வு உருவானது.
தூக்கத்தில் இருந்த மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததும் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடினர். உறைபனி குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் கார் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் மக்கள் தஞ்சமடைந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தில் பெரிய அளவில் உயிர்ச்சேதமோ, கட்டிட இடிபாடோ ஏற்படவில்லை என பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு துருக்கியில் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.