;
Athirady Tamil News

இலங்கையில் ஹீரோவான 12 வயது சிறுவன்; தனது குடும்பத்தை காப்பாற்றி வீரச்செயல்!

0

நுவரெலியா கொத்மலை, காமினி திஸாநாயக்க தேசிய பாடசாலையில் தரம் 06 இல் கல்வி பயிலும் 12 வயதுடைய கே. ஹிரந்த சமரகோன் என்ற சிறுவன், ஒரு பாரிய விபத்திலிருந்து தனது குடும்பத்தினரை மீட்டெடுத்த வீரச்செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

கடந்த 02 ஆம் திகதி குறித்த சிறுவன் குடும்பத்தினருடன் வெலிமடையிலிருந்து நுவரெலியா ஊடாக தவலந்தென்ன நோக்கி நள்ளிரவில் வேனில் பயணித்த போது, ரம்பொடை – கெரண்டி எல்ல பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

120 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
விபத்தின் போது சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி ஆகியோர் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்ததுடன் மற்றுமொருவர் அருகில் தூக்கி வீசப்பட்டுக் கிடந்துள்ளார்.

காயங்களுக்கு மத்தியிலும் மனத்திடம் குறையாத ஹிரந்த, மற்றுமொருவருடன் இணைந்து மரங்கள், பாறைகள் மற்றும் கொடிகளைப் பற்றிப் பிடித்துக்கொண்டு அந்த ஆழமான பள்ளத்திலிருந்து கடும் சிரமத்திற்கு மத்தியில் வீதிக்கு மேலே ஏறி வந்துள்ளார்.

வீதியில் சென்ற வாகனங்களின் கவனத்தை ஈர்க்க அவர்கள் பெரும் முயற்சி செய்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்ட ஒரு லொறி ஊழியர்களின் உதவியுடன் கொத்மலை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் காயமடைந்தவர்கள் லொறி மூலம் கொத்மலை வைத்தியசாலைக்கும், அங்கிருந்து நுவரெலியா பொது வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது சிறுவன் சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளான்.

இந்நிலையில் தமது உயிரைப் பொருட்படுத்தாது, நள்ளிரவு வேளையில் துரிதமாகச் செயற்பட்டு தனது குடும்பத்தினரைக் காப்பாற்றிய சிறுவன் ஹிரந்தவின் வீரத்தைப் பாராட்டி கொத்மலை பொலிஸார், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் தமது கௌரவத்தைத் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.