;
Athirady Tamil News

அதிகரிக்கும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்.. இஸ்ரேல் காரணமா..?

0

டெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. இந்த போர் ஒரு மாதத்தை கடந்தும் நடந்து வருகிறது. அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்தார். அதோடு ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. காலக்கெடு முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு டிரம்ப், ”ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரானின் நாகரீகம் அழிக்கப்படும். அதில் இருந்து அவர்களால் மீண்டு வர முடியாது” என்று மிரட்டல் விடுத்திருந்தார். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டு ஈரான் – அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தியது.

இதையடுத்து போர் 2 வாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். அமெரிக்கா, இஸ்ரேல் சார்பில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என கூறப்பட்டது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறந்தது. கப்பல்கள் வழக்கம்போல் பயணிக்க தொடங்கின. இதனால் கச்சா எண்ணெய், கேஸ் தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி உள்ளது என்றும், இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல கச்சா எண்ணெய் கப்பல்களுக்கு அனுமதியில்லை என்றும், அனைத்து கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சில நிமிடங்களுக்கு முன் ஈரானின் பார்ஸ் மாகாணத்தின் லார் நகரின் வான்வெளி பரப்பில் இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் 900 ரக டிரோன் பறந்தது. இந்த டிரோன் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் நவீன வான்வெளிப் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைக்கு அப்பாற்பட்டு அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் விமானமும், ட்ரோன்களும் ஈரான் வான்வெளிக்குள் நுழைவது என்பது போர் நிறுத்த மீறலாக கருதப்படும். இதற்கு உறுதியான முறையில் பதிலடி கொடுக்கப்படும். தற்போது இஸ்ரேலின் போர் நிறுத்த விதிமீறல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த செல்லும் கச்சா எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

இதனிடையே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் இலக்கு மறைவிடங்கள் மீது 100 வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இந்தத் தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் லெபனான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த நிலைப்பாட்டை ஈரான் மறுத்ததுடன், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆதரவு பெறும் பிற போராளிக் குழுக்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களையும் உள்ளடக்கிய அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் அங்கு மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.