;
Athirady Tamil News

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 14.10.2026

0

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (14.10.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வரவேற்புரை :

வரவேற்புரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகம், கெளரவ நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன்,
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2026ஆம் ஆண்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்கள் ஊடாக இதுவரை ரூ.4,525 மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், மாவட்டத்தில் கிடைக்கப்பெற்றுள்ள நிதி ஒதுக்கீடுகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்காக மத்திய அரசாங்க மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக சக்தி திட்டத்தின் கீழ் 334 திட்டங்களை முன்னெடுப்பதற்காக ரூ.651. 96 மில்லியனும், வீதி அபிவிருத்திக்காக ரூ.441.22 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் 833 வீடுகளை அமைப்பதற்காக ரூ.1,666 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் கைத்தொழில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காகக் கைத்தொழில் முதலீட்டு வலயத்துடன் தொடர்புடைய திட்டங்களுக்கு இவ்வாண்டு ரூ.425.71மில்லியனும், கடந்த ஆண்டு ரூ.71 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்குப் பங்களிப்புச் செய்த கெளரவ அமைச்சர், கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இணைத் தலைவர் உரை :

அதிகரித்துள்ள அபிவிருத்தி நிதியை வினைத்திறனுடன் பயன்படுத்த வேண்டும் – வடக்கு மாகாண ஆளுநர்

இம்முறை அதிகளவிலான அபிவிருத்தி நிதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அதனைத் திட்டமிட்ட வகையில் பயன்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

பிரதேச மற்றும் கிராம மட்டங்களில் முன்மொழியப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உரிய முறையில் ஆராய்ந்து, அவற்றுக்கான மதிப்பீடுகளைத் துல்லியமாகத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதுடன், ஒதுக்கப்படும் நிதியை உரிய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி, அபிவிருத்திப் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், மக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, அரச அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வு :

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள், திணைக்களங்களினால் முன்வைக்கப்பட்ட சவால்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது, அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் ஆராயப்பட்டதுடன், இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. மாவட்ட செயலகம், மத்திய அரச திணைக்களங்கள் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியவற்றினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

மேலும், சுழலும் உயிரியல் சுத்திகரிப்பு ஆலையை (RBC Plant) உள்ளூராட்சி மன்றத்திடம் கையளித்தல், நெடுந்தீவில் அமைக்கப்படவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குத் தேவையான எரிபொருளைக் கடற்படையினரின் பங்களிப்புடன் எடுத்துச் செல்லுதல் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் Life City திட்டத்தின் முன்னேற்றம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது.

பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், திணைக்களங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும் அபிவிருத்தித் திட்டங்களை உரிய முறையில் முன்னெடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா,
வட மாகாண அவைத் தலைவர் சி. வீ. கே. சிவஞானம்,
வடக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.