அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான்
அரோகரா கோசங்கள் விண்ணதிர தேரேறி வந்தார் திருக்கோணேஸ்வர பெருமான் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேஸ்வர பெருமானின் இரதோற்சவத் திருவிழா இன்று (17) வெள்ளிக்கிழமை பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது எம்பெருமான் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் மாதுமை அம்பாள் சமேதராக தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருபலித்தார்.
அம்மை , அப்பனுடன், பிள்ளையார் முருகன்
அம்மை , அப்பனுடன், பிள்ளையார் முருகன் ஆகிய தெய்வங்கள் தேரில் முன்னே செல்ல அடியார்கள் புடைசூழ எம்பெருமான் தேரில் ஆரோகணித்து வந்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.
மாணவிகளின் நடனங்களுடன் பக்தர்களின் அரோகரா கோசம் விண்ணதிர திருக்கோணேஸ்வர பெருமான் மாதுமை அம்பாள் சமேதராக வெளிவீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலித்தார்.
ஈழத்தின் வரலாற்று சிறப்புமிக்க திருக்கோணேச்சரம், இலங்கையின் திருகோணமலையில் அமைந்துள்ள பழமையான மற்றும் புகழ்பெற்ற சிவன்கோயிலாகும். திருக்கோணேஸ்வரப் பெருமான் (கோணேசர்) அருளும் இந்த தலம் தென்கைலாயம் என்றும், பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.
அதுமட்டுமல்லாது இலங்கை மன்னன் ராவணனால் வழிபடப்பட்டதாகக் கருதப்படும் இத்தலம், பிரம்மாண்டமான கன்னியா வெந்நீர் ஊற்று அருகில், கடல் மட்டத்தில் இருந்து உயர்ந்து காட்சியளிக்கிறது.
