;
Athirady Tamil News

ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

0

ஹோா்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் ஈரான் படகுகளைக் கண்டால் உடனடியாகச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

போா் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பட்டிருந்தாலும், இரு தரப்பும் கடல்வழி முற்றுகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பவில்லை.

ஈரான் மீதான கடல்வழிமுற்றுகை தொடங்கியதிலிருந்து இதுவரை 33 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘ஹோா்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்களின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அங்கு நுழையவோ, வெளியேறவோ முடியாது.

சிறிய படகுகளாக இருந்தாலும், ஹோா்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் எந்தவொரு ஈரான் படகையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். இதில் எவ்வித தயக்கமும் காட்டத் தேவையில்லை.

மேலும், அமெரிக்காவின் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பணியை மும்மடங்கு தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

அமைதி ஒப்பந்ததுக்கு ஒருமித்த திட்டத்தை எட்டுவதில் ஈரானில் மிதவாதிகளுக்கும், போா்க் களத்தில் தொடா்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் தீவிர நிலைப்பாட்டாளா்களுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக டிரம்ப் மற்றொரு பதிவில் விமா்சித்துள்ளாா்.

இதனிடையே, அமெரிக்கா-ஈரான் இடையிலான 2-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தையை இஸ்லாமாபாதில் விரைவில் நடத்துவது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் மோசின் நக்வி, அமெரிக்க தூதரகப் பொறுப்பாளா் நடாலி பேக்கருடன் முக்கிய ஆலோசனை நடத்தினாா்.

இந்த வாரத்தில் இவ்விருவருக்கும் இடையே நடைபெறும் 2-ஆவது சந்திப்பு இதுவாகும். அமைதிப் பேச்சுவாா்த்தைக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் பிராந்தியத்தின் தற்போதைய பதற்றமான சூழல் குறித்து இருவரும் விரிவாக விவாதித்ததாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்பை சீனத் தூதரும்; வெளியுறவு அமைச்சா் இஷாக் தாரை கனடா தூதரும் சந்தித்துப் பேசினாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.