;
Athirady Tamil News

40 பௌத்த பிக்குகளைக் கொண்டு போதைப் பொருள் கடத்த முயற்சி ; விசாரணையில் அம்பலமான பல தகவல்கள்

0

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த நிலையில், கைதான பிக்குமார் தொடர்பில் விசாரணையில் முக்கியமான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த போதைப்பொருட்களை கடத்திவந்த 22 பிக்குகள் நேற்றுமுன்தினம் (26) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காவல்துறை போதைப்பொருள் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்றுமுன்தினம் (26) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தநிலையில், காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்தப் போதைப்பொருள் கடத்தல் மிகவும் திட்டமிட்ட முறையில் பேஸ்புக் சமூக வலைத்தளம் வாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

அதன்படி, பிலியந்தலை – மடபாத்த பகுதியில் உள்ள விஹாரையொன்றைச் சேர்ந்த மூன்று பிக்குகள், ஏனைய பிக்குகளைச் சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு இந்த தாய்லாந்து பயணத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

கம்பஹா – மீகஹவத்த பகுதியில் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவரிடம் நடத்திய விசாரணையில், அவர் இதற்கு முன்னரும் இரண்டு முறை போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்திருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த முறை போதைப்பொருள் கடத்தி வந்ததற்காக அவருக்கு 80 ஆயிரம் ரூபா பணம் கிடைத்துள்ளதோடு, அந்தப் போதைப்பொருள் அத்துருகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த வீட்டை தேடி அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தக் கடத்தலின் பின்னணியில் தாய்லாந்தில் உள்ள ஒரு விஹாரையில் தங்கியிருக்கும் ஒரு இலங்கை பிக்கு செயற்பட்டுள்ளார் என்பதும் அவரே இந்தப் போதைப்பொருள் தொகுதியை இலங்கைக்குக் கொண்டு செல்வதற்காக வழங்கியுள்ளார் என்பதும் விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள பிக்குகளில் மூவர், இதற்கு முன்னரும் இதே போன்று போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மீகஹவத்த பகுதியில் கைதுசெய்யப்பட்ட பிக்கு நேற்று (27) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 2 ஆம்திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் இந்த விவகாரத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இருப்பினும், பிக்குகள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் மகாநாயக்க தேரர்களின் பரிந்துரை கடிதம் மற்றும் புத்தசாசன அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற விதிமுறை தற்போதைய அரசாங்கத்தில் நீக்கப்பட்டமை இவ்வாறான குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.