ஆரோக்கியமான வாழ்விற்க்கு சேதன விவசாயத்தின் தேவை தற்போது அனைவராலும் அதிகளவில் உணரப்பட்டுள்ளது – அரசாங்க அதிபர் தெரிவிப்பு
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில், சேதன விவசாயம் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தொடக்கவுரையுடன் இன்றைய தினம் (07.05.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இத் தெளிவூட்டல் கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் சேதன விவசாய கட்டுப்பாட்டு அலகின் பணிப்பாளர் அச்சினி வீரவர்த்தனே, மற்றும் உதவி பணிப்பாளர் வினோயா பெரேரா, விவசாயத் துறை உதவி பணிப்பாளர் டாக்டர். பிரியங்கா திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் ஏற்றுமதி ஊக்குவிப்பு உத்தியோகத்தர் லசித் ஜெயவர்த்தன, இலங்கை தரநிலை உதவி பணிப்பாளர் கனிஷ்கா டி செல்வா, Ceycert (Pvt) ltd நிர்வாக இயக்குநர் சஞ்சீவ் மஞ்சனைகே, டிஜிட்டல் வணிக சுற்றுச்சூழல் மேலாளர் தினிடு வட்டுலந்தா மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடக்கு மாகாண உதவி பணிப்பாளர் க.கனோஜன் ஆகியோர் பங்குபற்றினார்கள்.
இவ் தெளிவூட்டல் கருத்தரங்கில் தொடக்கவுரையாற்றிய அரசாங்க அதிபர், சேதன விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,மிக நீண்ட காலமாக இச் சேதன பசளையின் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பாக அதிகளவில் அனைவராலும் உணரப்பட்டும் உரையாடப்பட்டு வருவதாகவும், வடக்கு மாகாணத்தில் 40 பேர் சேதன விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அதில் 12 பேர் ஆவண ரீதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சேதன பசளை விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், சேதன விவசாய கட்டுப்பாட்டு அலகு அவர்களுக்குரிய சான்றிதழ்களை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் ஒரு விவசாய உற்பத்தியை வாங்கினால் அது சேதனமா என்பதை உறுதிப்படுத்துவதில் சந்தேகங்கள் இருப்பதாகவும், ஆனால் ஆரோக்கிய ரீதியாக வாழ்வதற்கு சேதன விவசாயம் அவசியம் எனவும், முழுமையாக சேதனப் பசளையை பாவித்து விவசாயத்தில் ஈடுபடலாமா என்பது கேள்விக் குறியாக இருந்தாலும் இயலுமானவரை சேதனப் பசளையை பயன்படுத்தி கொள்வது அவசியமாகிறது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், இத் துறை சார்ந்த அறிவை மேன்மேலும் பெற்றுக்கொள்ள அக்கறையுடன் கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், சேதன விவசாயம் தொடர்பான பெறுமதியான கருத்துக்களை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
இக் கருத்தரங்கில் சேதன விவசாயத்தின் முக்கியத்துவம், இலங்கை சேதன தரநிலை தரநிலைப்படுத்தல், சேதனப் பொருட்களை டிஜிட்டல் சந்தைப்படுத்தல், சேதன பசளை விவசாய சான்றிதழ் நடைமுறை, அடுத்த தலைமுறைக்கான சேதன உணவு செயலாக்கம் மற்றும் பாதுகாப்பு போக்குகள், சந்தைப்படுத்தல் சாத்தியப்பாடுகள், (NOCU) ஊக்குவிப்பதில் அதன் பங்களிப்பு, இலங்கை ஏற்றுமதியில் சேதன விவசாயத்தின் பங்களிப்பு என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
இவ் செயலமர்வில் பதனிடுபவர்கள், சேதன மற்றும் விவசாய உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் , சிறு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
