;
Athirady Tamil News

ஈரானின் காசிம் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; மீண்டும் போரா?

0

வாஷிங்டன் டி.சி.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது. தொடர்ச்சியாக நடந்த தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர், முக்கிய தலைவர்கள், உயரதிகாரிகள் உள்பட பலர் பலியானார்கள். அந்நாட்டில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதல், ஏறக்குறைய 40 நாட்களாக நீடித்து வந்த நிலையில், ஏப்ரல் 8-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று தணிந்தது.

எனினும் ஈரான், அமெரிக்கா இடையே நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பாகிஸ்தான் நாட்டில் வைத்து, 21 மணிநேரம் நீடித்த அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் முடிவாகவில்லை. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்கா தெரிவித்தது.

இதனை தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், நீடித்த பொருளாதார நெருக்கடி நீடிக்கும் என அமெரிக்கா தெரிவித்தது. இதனால், மேற்காசிய பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. எனினும் போர் நிறுத்த நீட்டிப்புக்கான அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். அதனால், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் தணிந்துள்ளது.

இந்த சூழலில், ஈரானில் உள்ள காசிம் துறைமுகம் மற்றும் ஈரானின் தெற்கே உள்ள பந்தர் அப்பாஸ் நகர் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதனை பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. ஈரானின் முக்கிய கடல்சார் வழித்தட பகுதிகள் மீது அமெரிக்க ராணுவம் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளன.

எனினும், மேற்காசியாவில் அமெரிக்கா மீண்டும் முழு அளவில் போரில் ஈடுபடுவதற்கான அடையாளம் இது இல்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது. இது மீண்டும் போர் தொடங்குவதற்கான அடையாளமோ, போர்நிறுத்த உடன்பாடு முடிவுக்கான அடையாளமோ இல்லை என அமெரிக்க மூத்த அதிகாரி என்னிடம் கூறினார் என பாக்ஸ் நியூஸ் தலைமை தேசிய பாதுகாப்பு செய்தியாளரான ஜெனிபர் கிரிபின் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.