தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை: தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், ஆட்சியமைக்க அழைக்குமாறு தவெக தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
அதை ஆளுநர் ஏற்காமல், 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அழைக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், எம்எல்ஏக்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டியது சட்டப்பேரவை தான்.
ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. தவெக ஆட்சியமைப்பதை விரும்பாமல், பாஜக செய்யும் சதி என அரசியல் கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்நிலையில், இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிராக தவெக ஆட்சியமைக் கூடாது என்று பாஜக அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் செயல்படுவதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் சார்பில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணா சாலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பங்கேற்று, ஆளுநர் மற்றும் மத்திய பாஜகவுக்கு எதிராக கண்ட கோஷங்கள் எழுப்பினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்வப் பெருந்தகை பேசும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்தில், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக பாஜக மற்றும் அவர்களின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார்.
அவர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது” என்றார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பு ஆளுநர் மற்றும் பாஜகவால் சிதைக்கப்பட்டுள்ளது.
இது இந்திய அரசமைப்பு சட்டம், மக்களாட்சி மீதான தாக்குதல். இதை அனுமதிக்க முடியாது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும். அதற்காகவே காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறது.
சமூக விரோத சக்திகள் தமிழகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நுழைய அனுமதிக்க மாட்டோம். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் யாரும் விலை போகவில்லை அனைவரும் ஒற்றுமையாக தவெகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு. துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம்மோகன், மாவட்ட தலைவர் கராத்தே செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.