பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
பாகிஸ்தானில், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 20,000 பேர் அதற்கான சிகிச்சை துவங்கப்பட்டதும் மாயமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் உள்பட சுமார் 22 நாடுகளில் எச்ஐவி வைரஸின் பாதிப்புகள் பரவலாகக் காணப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 200 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட 84,000 எச்ஐவி நோயாளிகளில் சிகிச்சை துவங்கப்பட்டதும் சுமார் 20,000 பேர் மாயமானதாக, உள்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால், எச்ஐவி பாதிப்பானது சமூக பரவலாக உருவாகக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இத்துடன், கடந்த 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதிய எச்ஐவி பாதிப்புகளின் எண்ணிக்கை 48,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் 3,69,000 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் லர்கானா, டான்சா மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் கண்டறியப்பட்ட எச்ஐவி பாதிப்புகளில் சுமார் 80 சதவிகிதத்துக்கு அதிகமானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.