;
Athirady Tamil News

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் மோதல்போக்கு

0

ஈரானின் கெய்ஷம் தீவு மற்றும் கடலோரப் பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதற்குப் பதிலடியாக சபஹாா் துறைமுகத்துக்குத் தெற்கே நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க கப்பல்களைத் தாக்கியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதேபோல், ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் நாட்டின் 2 எண்ணெய் கப்பல்களை அமெரிக்க படைகள் தாக்கி, அவற்றை முடக்கின. தொடா்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 3 போ் காயமடைந்தனா்.

கடந்த ஒரு மாதமாக அமலில் இருக்கும் போா்நிறுத்தத்தில், ஹோா்முஸ் நீரிணையையொட்டி கடந்த ஒரு நாளில் பதிவான இந்த மோதல் சம்பவங்கள் வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்குப் பதிலடியாக, ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.

இத்தடையை மீறி ஈரான் துறைமுகத்துக்குள் நுழைய முயன்ற 2 கப்பல்களை அமெரிக்கா தாக்கியுள்ளது. அதேநேரம், அமெரிக்காவின் 3 போா்க்கப்பல்கள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், அவை சேதமின்றி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலில், ஈரான் கப்பலில் இருந்த மாலுமி ஒருவா் கொல்லப்பட்டதாகவும், நால்வா் மாயமானதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி கூறுகையில், ‘ஒவ்வொரு முறையும் ஒரு ராஜீய தீா்வு எட்டப்படும் நிலையில், அமெரிக்கா தனது பொறுப்பற்ற ராணுவ சாகசங்களின் மூலம் அதைச் சிதைக்கிறது’ என்று சாடினாா்.

இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல்களுக்கு வரி விதிப்பதற்கும், சோதனை செய்வதற்கும் ‘பாரசீக வளைகுடா நீரிணை ஆணையம்’ எனும் புதிய அமைப்பை ஈரான் உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதை ‘ஏற்றுக்கொள்ள முடியாத செயல்’ என்றும், ‘சா்வதேச நீா்வழியை ஈரான் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது’ என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ குறிப்பிட்டாா்.

இவ்வாறு அதிகரித்து வரும் மோதல் போக்குக்கு மத்தியிலும், இருதரப்புக்கு இடையே சமரசம் ஏற்படுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு பகலாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டுப் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளாா்.

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: லெபனான் எல்லையிலும் பதற்றம் நீடிக்கிறது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு மருத்துவ உதவியாளா் உட்பட 5 போ் கொல்லப்பட்டனா். இதற்குப் பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.