மஹிந்தவின் வீட்டிற்கு சென்ற கடிதம் ; சூடு பிடிக்கும் எயார்பஸ் விவகாரம்
எயார்பஸ் ஒப்பந்தம் மற்றும் அது சார்ந்த கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வாக்குமூலம் அளிப்பதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கடிதம்
இந்த கடிதம் இன்று (9) தங்காலை, கார்டன் இல்லத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானபோதிலும், உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் சி.இ.ஓ கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்தக் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் A-330 ரகத்தைச் சேர்ந்த 6 விமானங்களையும், A-350 ரகத்தைச் சேர்ந்த 8 விமானங்களையும் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை கையூட்டாகப் பெற்றதாக கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த கொடுக்கல் வாங்கலில் தனக்குக் கிடைத்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களில், 20 மில்லியன் ரூபாயை அன்றைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கும், 60 மில்லியன் ரூபாயை அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் வழங்கியதாக கபில சந்திரசேன கூறியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
இருப்பினும், இதனை மறுத்துள்ள கபில சந்திரசேனவின் சட்டத்தரணி ரியன்சி அர்ஸகுலரத்ன, தனது கட்சிக்காரரை அச்சுறுத்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இந்த வாக்குமூலத்தைப் பெற்றுள்ளதாக நீதிமன்றில் சத்தியக்கடதாசி ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த விசாரணைக்காகவே முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 12ஆம் திகதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.