;
Athirady Tamil News

திருமணச் சான்றிதழின் குறித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

0

நிர்வாக நடைமுறைகளின் போது சமர்ப்பிக்கப்படும் திருமணச் சான்றிதழ் ஒன்றின் செல்லுபடியாகும் தன்மை அல்லது அதன் சட்டபூர்வ நிலை குறித்து கேள்வி எழுப்பவோ அல்லது தீர்மானிக்கவோ எந்தவொரு நிர்வாக அதிகாரிக்கும் அல்லது அரச நிறுவனத்துக்கும் அதிகாரம் கிடையாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியைச் சேர்ந்த அஷில ரணசிங்க என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரரின் தந்தை மற்றும் சிற்றன்னை வசம் இருந்த அரச காணி ஒன்றின் நீண்டகால குத்தகை உரிமையைப் பெறுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.

எனினும், மனுதாரரின் தந்தை தனது முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்த பின்னரே இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என்பது குறித்து கேள்வி எழுப்பிய அதிகாரிகள், இரண்டாவது திருமணம் செல்லுபடியாகாது எனக் கூறி மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

நீதியரசர்களான தம்மிக கனேபொல மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை விசாரணை செய்தது. இதன்போது நீதியரசர் ஆதித்ய படபெந்திகே பின்வரும் முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

ஒரு திருமணத்தின் செல்லுபடியாகும் தன்மை, இல்லாமை அல்லது விவாகரத்து குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் குடும்ப நீதிமன்றங்களுக்கு (மாவட்ட நீதிமன்றம்) மாத்திரமே உரியது.

திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தின் 52 ஆவது பிரிவின்படி, ஒரு திருமணச் சான்றிதழ் என்பது அந்தத் திருமணம் சட்டபூர்வமாக இடம்பெற்றதற்கான முதனிலைச் சான்றாகும்.

ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது அறிவித்தல் இல்லாத நிலையில், ஒரு திருமணச் சான்றிதழைப் போலியானது என்றோ அல்லது செல்லுபடியற்றது என்றோ தீர்மானிக்க நிர்வாக அதிகாரிகளுக்கு எவ்வித சட்டபூர்வ அதிகாரமும் இல்லை.

அதிகாரிகளின் இந்த செயலானது அவர்களது அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது எனத் தெரிவித்த நீதிமன்றம், மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்துச் செய்தது.

அத்துடன், இயற்கை நீதியின் கோட்பாடுகளுக்கு இணங்க புதிய விசாரணையை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

மேலும், ஒரு தகுதியுள்ள நீதிமன்றத்தின் விவாகரத்து தீர்ப்பு அல்லது அறிவித்தல் இல்லாத பட்சத்தில், மனுதாரரின் தந்தையின் இரண்டாவது திருமணத்தின் சட்டபூர்வத் தன்மை குறித்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விசாரணை நடத்த வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடுமையான கட்டளை பிறப்பித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.