அமெரிக்காவிற்கு வந்த சோகம் ; எகிறிய எரிபொருள் விலைகள்
போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கங்கள் குறித்த கவலைகள் தற்போது அமெரிக்காவில் மேலோங்கி வருகின்றன.
குறிப்பாக, எரிபொருள் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் ஆகியவை பொதுமக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்த மோதலின் தொடக்கத்தில், அமெரிக்கா ஒரு எண்ணெய் ஏற்றுமதி நாடு என்பதால், ஹோர்முஸ் நீரிணை வழியிலான விநியோகத் தடைகள் தங்களைப் பாதிக்காது என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், அவரது அந்த கணிப்பு தற்போது தவறாகியுள்ளது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் இதன் நேரடித் தாக்கம் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, சிறப்பு அங்காடிகளுக்குப் பொருட்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
அத்துடன் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் விலை அதிகரித்தது மட்டுமின்றி, போக்குவரத்து செலவு உயர்ந்ததால் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
போர் முடிவுக்கு வந்தவுடன் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பும் என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நெருக்கடி முடிவுக்கு வர எவ்வளவு காலம் எடுக்கும் என்பதில் தெளிவான காலக்கெடு ஏதும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
முதலில் சில நாட்கள் என்றார், பிறகு சில வாரங்கள் என்றார் ஆனால் தற்போதைய சூழலில், அமெரிக்கா எதிர்பார்க்கும் ஒரு தீர்வை எட்டும் வரை காத்திருக்க வேண்டிய நிலையே நீடிக்கிறது. பொருளாதாரச் சரிவைச் சீர்செய்வதற்கான அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வெள்ளை மாளிகை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.