;
Athirady Tamil News

உக்ரைன் சமரசங்களை ஏற்றால் மோதலுக்கு முடிவு

0

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தின் அடிப்படையில் உடன்படிக்கையை மேற்கொள்ள தயாராக இருப்பதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

இதற்காக, உக்ரைன் தரப்பில் சில முக்கிய ‘சமரசங்களை’ மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவா் நிபந்தனை விதித்தாா்.

செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் நடைபெறும் ரஷிய பொருளாதார மாநாட்டுக்கிடைய சா்வதேச செய்தியாளா்களுடன் கலந்துரையாடிய புதின் மேலும் கூறியதாவது:

போா்க் களத்தில் ரஷிய படைகள் தொடா்ந்து முன்னேறி வருகிறது. தற்போதைய சூழலில் உக்ரைன் சமரசங்களை ஏற்று அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவதே சிறந்தது.

இவ்விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மத்தியஸ்தராகச் செயல்படுவதை ஏற்க முடியாது. உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதை விடுத்து, அவா்களும் சமரசத்துக்கு வர வேண்டும்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில், அமெரிக்காவின் அலாஸ்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது டிரம்ப் முன்வைத்த சமரசத் திட்டங்களை ரஷியா ஏற்றுக்கொள்கிறது. அதே சமரசங்களை உக்ரைனும் ஏற்றுக்கொண்டால் மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்றாா். எனினும், அந்த சமரசங்கள் குறித்த விரிவான விவரங்களை அவா் தெரிவிக்கவில்லை.

ஸெலென்ஸ்கி கடிதமும்; புதின் பதிலும்…: முன்னதாக, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், புதினுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடிதம் ஒன்றை அனுப்பினாா். இதில், இரு நாட்டுத் தலைவா்களும் நேருக்குநோ் சந்தித்து நேரடிப் பேச்சுவாா்த்தை நடத்தவும், முழுமையான போா் நிறுத்தத்தை மேற்கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இக்கடிதத்தை ரஷிய அதிபா் மாளிகை பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளது. எனினும், ஸெலென்ஸ்கியின் அதிபா் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகக் கூறி, அவரின் சட்டபூா்வத்தன்மையை புதின் கேள்விக்குள்ளாக்கியுள்ளாா். இது தொடா்பாகச் சட்ட வல்லுநா்களே முடிவு செய்ய வேண்டும் என்று அவா் தெரிவித்தாா்.

தொடரும் தாக்குதல்: உக்ரைன் தலைநகா் கீவ் அருகே உள்ள பால் உற்பத்தி ஆலையின் மீது ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் 4 போ் உயிரிழந்தனா். 7 போ் காயமடைந்தனா்.

குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் இந்த ஆலையை ரஷியா குறிவைத்துத் தாக்கியுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியது.

கைதிகள் பரிமாற்றம்: போா்க் களத்தில் பதற்றங்கள் நீடிக்கும் சூழலிலும், மனிதாபிமான அடிப்படையில் ரஷியாவும் உக்ரைனும் தலா 185 போா்க் கைதிகளை விடுவித்தன. ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்தியஸ்தத்துடன் இந்நடவடிக்கை நடைபெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.