;
Athirady Tamil News

பிரான்சில் வெப்ப அலை தீவிரம்; கடந்த ஆண்டை விட பலி எண்ணிக்கை அதிகரிக்கும் – அதிர்ச்சி தகவல்

0

பாரீஸ்

பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ள நிலையில், கடந்த ஆண்டை விட பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வெப்ப அலை
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் வெப்ப அலை தீவிரமடைந்து உள்ளது. பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் வெப்ப அலை பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதுபற்றி அந்நாட்டு சுகாதார மந்திரி ஸ்டெபானி ரிஸ்ட் கூறும்போது, முழுமையான பாதிப்பு இன்னும் வெளிப்படவில்லை என எச்சரித்து உள்ளார்.

இந்த வெப்ப அலையால் நாடு முழுவதும் வெப்ப நிலை சாதனை அளவாக பதிவாகி உள்ளது. பாரீஸ் நகரில் 40.9 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. பிரான்சின் பல்வேறு பகுதிகளிலும் வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 44.3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படுகிறது.

ரெட் அலர்ட்
இதனால், பெரிய அளவில் பொது சுகாதார நெருக்கடி ஏற்பட்டு 72 துறைகள் ரெட் அலர்ட்டில் வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி ரிஸ்ட் கூறும்போது, சமீப நாட்களில் காணப்படும் அதிகரித்த வெப்ப நிலையால், சிறுவர் சிறுமிகள் உள்பட பொதுமக்கள் பலரும் அவசரகால அறைகளில் 10 நாட்கள் வரை தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது என்றார்.

கடந்த ஆண்டில் இதே நேரத்தில் காணப்பட்ட பலி எண்ணிக்கையை விட நடப்பு ஆண்டில் பலி எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணிகளை காண்கிறோம்.

வெப்பம் சார்ந்த வியாதிகள்
இதன் தொடர்ச்சியாக, மருத்துவமனைகளில் வெப்பம் சார்ந்த வியாதிகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. வெப்ப நிலை தணிந்த பின்னரும் நோயாளிகள் சிகிச்சை பெறுவது சில வாரங்கள் வரை நீடிக்கலாம் என்றும் ரிஸ்ட் கூறினார்.

எனினும், பலியானவர்களின் சரியான எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. ஏனெனில், 60 சதவீதம் அளவிலேயே மின்னணு முறையில் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதனால், முழுமையான அளவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட பின்னரே நம்பத்தக்க எண்ணிக்கை பற்றிய விவரம் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.